இ.வி.கே.எஸ்க்கு போட்டி ஒ.பி.எஸ்ஸா, இ.பி.எஸ்ஸா?

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் அதிகார பலத்துடன் ஆதரவுடன் களம் இறங்கும் காங்கிரஸ் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், இரண்டாவது இடத்தைப் பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சியை எடைபோடும் தேர்தல் என்று பார்க்கப்படுவது வழக்கம்.  ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் என்பது அதிமுகவில் யாருக்கு தொண்டர்களிடம் அதிக செல்வாக்கு என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கான களமாகவும், இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான போட்டிக் களமாகவும் மாறியுள்ளது.

தமிழகத்தில் 1996 க்கு பிறகு திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதிகார பலம், பண பலம் ஆகியவற்றால் ஆளும் கட்சி தான் இடைத்தேர்தல்களில் வெற்றிப்பெறும் என்ற சூழல் உருவாகிவிட்டது.

விதிவிலக்கான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

ஜெயலலிதா மறைவுக்குப்பின் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி மட்டுமே இதில் விதிவிலக்காக மாறியது.   தில்லி திகார் சிறைக்குச் சென்று வந்த டி.டி.வி.தினகரனுக்கு ஏற்பட்ட அனுதாப அலை, தீவிர பாஜக எதிர்ப்பு உள்ளிட்டவற்றால் 52 சதவீத வாக்குகளை பெற்ற அவர் ஆளும் கட்சியான அதிமுகவை பின்னுக்குத் தள்ளியும், திமுகவை டெபாசிட் இழக்கச் செய்தும் வெற்றிபெற்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா மறைவால் ஏற்படும் அனுதாபம், ஆளும் கட்சியின் அதிகார பலம், பண பலம், பழுத்த அரசியல்வாதி, அதிமுகவில் உள்கட்சிப்பூசல், எதிர்கட்சிகளிடம் ஒற்றுமையின்மை உள்ளிட்டவற்றால் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எளிதில் வெற்றிபெறக்கூடும்.

போட்டிக்கு தயாராகும் இபிஎஸ், ஓபிஎஸ்

அதேநேரத்தில் இரண்டாவது இடத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என எதிர்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. 2021 பேரவைத் தேர்தல் வரை இரட்டைத் தலைமையில் இருந்த அதிமுக இப்போது இபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து நிற்கின்றன. இபிஎஸ் வசம் 62 எம்.எல்.ஏ.க்கள், 90 சதவீத கட்சி நிர்வாகிகள் இருந்தாலும் தொண்டர்களிடம் தனக்கு தான் அதிக செல்வாக்கு என ஓபிஎஸ் தொடர்ந்து முழங்கி வருகிறார்.

இபிஎஸ், ஓபிஎஸ் இடையிலான பொதுக்குழு விவகார வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. இதற்கிடையே இதுவரை மத்திய தேர்தல் ஆணையம் தங்களது ஆவணங்களின்படி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி என்ற தொடர்ந்து கூறிவருகிறது.

இந்நிலையில், தங்களது அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என இபிஎஸ், ஓபிஎஸ் என இரு தரப்பினருமே அறிவித்துள்ளனர். இருவரும் பாஜக, தமாகா, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளனர். தங்களது அணி போட்டியிடுவதாக அறிவித்தாலும் பாஜக போட்டியிட்டால் ஆதரவு தெரிவிப்பதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

இரட்டை இலை கிடைக்குமா?

இபிஎஸ், ஓபிஎஸ் என இருதரப்பினரும் போட்டி போட்டு களம் இறங்கியிருப்பதால் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கான ஏ, பி பாரங்களில் யார் கையொப்பமிடுவது செல்லும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

நிலுவையில் இருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜன.30 க்குள் அல்லது பிப்ரவரி 2 வது வாரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு வந்தாலும், அது தன்னிச்சையான அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையத்தை கட்டுப்படுத்துமா என்பது இதுவரை தெளிவாகவில்லை.

இபிஎஸ் கணக்கு

இரட்டை இலையோ, தனிச் சின்னமோ களத்தில் வேட்பாளரை இறக்கி தொண்டர் பலத்தை காட்ட வேண்டும். வெற்றியோ, தோல்வியோ கணிசமான வாக்கு சதவீதத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்து விட வேண்டும்.

அப்போது தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு 3 வது தலைவராக அதிமுகவில் உருவெடுக்க முடியும். இப்போது இல்லை என்றாலும் பலத்தை நிரூபித்துவிட்டால் 2024 மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எப்படியும் பெற்றுவிடலாம் என்பது இபிஎஸ் கணக்காக உள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஓபிஎஸ் கணக்கு என்ன?

தங்களது வேட்பாளரை களம் இறக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தாலும் பாஜக போட்டியிட்டால் ஆதரவு என இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.  கொங்கு மண்டலத்தில் வரும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மிகக் குறைந்த வாக்குகள் தான் கிடைக்கும். பாஜகவுடன் ஆதரவு களம் இறங்கினால் கூடுதல் வாக்கு பெறலாம்.

இபிஎஸ், ஓபிஎஸ் என இருவர் இடையே உள்ள முரண் காரணமாக இரட்டை இலை முடங்கிவிட்டால் ஈரோடு கிழக்கில் காங்கிரஸின் கை சின்னத்துக்கு எதிராக தங்களது தாமரை சின்னத்தை பிரபலப்படுத்தி இரட்டை இலக்கத்தில் வாக்கு பலம் பெற்றுவிடலாம் என பாஜக புதுக்கணக்கு போடத் தொடங்கியுள்ளது

ஆனால், இபிஎஸ் – யை பகைத்துக்கொண்டு ஓபிஎஸ்.,க்கு பாஜக ஆதரவு அளிக்கப்போவதில்லை. அப்படியே ஆதரவு தெரிவித்தாலும் பாஜக மற்றும் உதிரி கட்சிகளை ஒருங்கிணைத்து ஓரளவு வாக்கு பெறலாம். பாஜக போட்டியிட்டால் இபிஎஸ் தனது பலத்தை நிரூபிக்க நிச்சயம் தனியாக வேட்பாளரை களம் இறக்குவார்.

இரட்டை இலை சின்னத்தை பெற தன்னிடம் இபிஎஸ் கையொப்பம் பெற தவிர்த்தால் இரட்டை இலை தானாக முடங்கிவிடும். இபிஎஸ் வேட்பாளருக்கு சுயேச்சை சின்னம் தான் கிடைக்கும். பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடுவதில் இருந்து தப்பிவிடலாம் என்பது ஓபிஎஸ் கணக்கு என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது, அதிமுக கட்சி விதிபடி பொதுக்குழுவை முறைப்படி கூட்டி ஓபிஎஸ் – யை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்.  அவருக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கையொப்பம் இட்டால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் உறுதியாக ஒதுக்கும். இரட்டை இலை முடங்க வாய்ப்பு இல்லை.  அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட முடியாது. அதிமுக வேட்பாளருக்கு, கூட்டணி கட்சிகள் ஆதரவு உறுதியாக கிடைக்கும். ஓபிஎஸ் கனவு ஒருபோதும் பலிக்காது என்றார் அவர்.

பாஜக எடுத்த ரகசிய வாக்குக்கணிப்பு

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றப்பின் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது என்ற தோற்றத்தை கட்சி நிர்வாகிகள் கட்டமைத்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில் அதை நிரூபித்துக்காட்ட வேண்டிய நிர்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், இபிஎஸ், ஓபிஎஸ் என இருவர் இடையே உள்ள முரண் காரணமாக இரட்டை இலை முடங்கிவிட்டால் ஈரோடு கிழக்கில் காங்கிரஸின் கை சின்னத்துக்கு எதிராக தங்களது தாமரை சின்னத்தை பிரபலப்படுத்தி இரட்டை இலக்கத்தில் வாக்கு பலம் பெற்றுவிடலாம் என பாஜக புதுக்கணக்கு போடத் தொடங்கியுள்ளது.

ஒன்று இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுக வேட்பாளருக்கு ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரையும் கையொப்பம் இட வலியுறுத்துவது, அது நடக்கவில்லையென்றால் பொது வேட்பாளரை பாஜக சார்பில் நிறுத்தி இரு தரப்பினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு கேட்பது என்ற முடிவுக்கு பாஜகவின் தேசியத் தலைமை வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக போட்டியிட்டால் எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2,500 பேரிடம் வாக்குக் கணிப்பு நடத்தி தேசியத் தலைமைக்கு தமிழக பாஜக ரகசியமாக அனுப்பிவைத்துள்ளது. இந்த முடிவுகளின்படி இன்னும் ஓரிரு நாள்களில் கட்சித் தலைமை இறுதி முடிவு எடுக்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திடீர் திருப்பங்கள் உருவாகலாம்

பாஜகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு என முன்கூட்டியே அறிவித்துவிட்டார்.  ஆனால், இபிஎஸ் ஒருபோதும்  ஆதரவு தெரிவித்து வேட்பாளரை களம் இறக்காமல் விட்டால் தனக்கு நிகரானவர் ஓபிஎஸ் என ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும்.  இதன் மூலம் இதுவரை இபிஎஸ் கட்டமைத்து வந்த பிம்பம்  அதிமுகவிலும், அரசியல் அரங்கிலும் உடைந்துவிடும். எனவே, எந்த சின்னமாக இருந்தாலும் இபிஎஸ் தரப்பில் வேட்பாளரை களம் இறக்கப் போவது உறுதி.

இது குறித்து பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டபோது, ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்த அனைத்து உத்திகளையும் ஆய்வு செய்து வருகிறோம். பாஜக கூட்டணி  வேட்பாளர் அல்லது பாஜக வேட்பாளர் என எந்த வகை உத்தியை வேண்டுமானாலும் பயன்படுத்த பாஜக தயங்காது என்றார் அவர்.

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த 10 நாள்களுக்குள் பல அரசியல் திருப்பங்கள் ஏற்படக்கூடும். இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான உத்திகளை தான் எதிர்கட்சிகள் வகுத்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பெட்டி செய்தி

2 வது இடம் யாருக்கு?

இந்த தேர்தலைப் பொறுத்தவரை ஒபிஎஸ், இபிஎஸ்ஸில் யார் பெரியவர் எனும் போட்டியே நடக்கிறது. கொங்கு பகுதி என்பது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான இடம் என்று கருதப்பட்டாலும் ஈரோடு கிழக்கு அதிமுகவுக்கு சாதகமான தொகுதி அல்ல. அதன் காரணமாகவே மிகப்பெரிய பணபலம் கொண்டவரும் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவராக இருந்த யுவராஜா போட்டியிட்டும், திருமகன் ஈவெரா.,விடம் தோல்வி அடைந்தார்.

மேலும் தேர்தலில் தோல்வி அடைந்த ஒரு கட்சி, பிளவுபட்டிருப்பதால் அந்த தொகுதியில் எடுத்த 38% வாக்குகள் எவ்வளவு தூரம் தாக்கு பிடிக்கும் என்பது கேள்விக்குறி. மேலும் தமிழகம் முழுவதுமே ஓ.பன்னீர்செல்வம் அமைதியானவர் விசுவாசமானவர் அனைவருக்கும் மதிப்பு கொடுப்பவர் எனும் தோற்றம் உள்ளது.

நாடார்கள் சேர, சோழ, பாண்டியர் வம்சத்தினர் என ஜெயலலிதா கூறியதை குறிப்பிடும் பன்னீர்செல்வத்துக்கு கொங்கு பகுதியில் உள்ள நாடார்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது, அது குறித்து எடப்பாடி பழனிச்சாமி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இவை அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் பொழுது திமுக கூட்டணி இந்த தேர்தலில் பெரிய வெற்றி பெறும், யார் இரண்டாம் இடம் பிடிக்கப் போகிறார்கள் எனும் போட்டியே தற்போது நடைபெறுகிறது.