விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதற்காக இணைந்து செயல்படுவோம்!

செவ்வாய்கிரகத்திலிருந்து இலட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் இங்கு தரையிறங்கி, நமது மரங்கள் எல்லாவற்றையும் வெட்டிச் சாய்த்து, நம் மண்ணைப் பாலைவனங்களாக மாற்றி, அதோடு நிற்காமல் நமது நதிகளிலிருந்து நீரையும் உறிஞ்சிவிட்டால் அவைகளை நிச்சயம் நாம் அழித்து ஒழித்திருப்போம். ஆனால் இப்போது பிரச்சனை வேற்றுக்கிரக வெட்டுக்கிளிகள் அல்ல, பிரச்சனையாக இருப்பது நாம்தான்.

சத்குரு: இன்றைக்கு, மனிதகுலம் எதிர்கொண்டிருக்கும் நீர்ப்பற்றாக்குறை மற்றும் ஏனைய சுற்றுச்சூழலியல் பிரச்சனைகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது. இந்த எல்லாப் பிரச்சனைகளுக்கும் பின்னால் அடிப்படையாக இருப்பது மனிதன். இந்த பூமிக்கு நாம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைப் போல் மற்ற எந்த உயிரினமாவது தீமை செய்திருந்தால், அவைகளைக் கையாள்வதற்கான ஒரு உடனடி வழியை நாம் கண்டுபிடித்திருப்போம்.

பிரச்சனையின் வேர் நாம் என்று இருக்கும் காரணத்தால், நாம் தீர்வுக்கும் மூலமாக இருக்கமுடியும். தற்போது நாம் விழிப்புணர்வில்லாத, நிர்ப்பந்தமான ஒரு செயல் நிலையில் இருப்பதால்தான், நாம் ஒரு பிரச்சனையாக இருக்கிறோம். நாம் விழிப்புணர்வுடன் இருந்தோம் என்றால், இயல்பாகவே நாம் ஒரு தீர்வாக இருப்போம். இதற்காகத்தான், நான் ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் மற்றும் பலருடனும் கலந்தாலோசித்து, “விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவோம்” என்ற இந்தக் கருத்தை முன்மொழிந்துள்ளேன்.

 சூழலியலுக்கு வாக்களியுங்கள்

பல நாடுகளில், தங்களது தேசத்தின் தலைமையை வாக்களித்து, தேர்வு செய்யும் திறன் கொண்டவர்களாக 520 கோடி மக்கள் இருக்கின்றனர். சூழலியல் பிரச்சனைகள் அரசாங்கங்களைத் தேர்வு செய்யும் காரணிகளாக இருப்பதற்காக, குறைந்தபட்சம் 300 கோடி மக்களை அந்த நோக்கில் உருவாக்குவது எப்படி என்ற வழிவகைகளை நாம் ஆராய்ந்து வருகிறோம். அவர்களது நாட்டில் கட்டாயம் நிகழ்ந்தாக வேண்டிய குறைந்தபட்ச ஐந்து சூழலியல் அம்சங்கள் மற்றும் நிகழக்கூடாத இரண்டு அல்லது மூன்று அம்சங்கள் குறித்து இந்த 300 கோடி மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்வதற்கு நாம் விரும்புகிறோம். இதை நாம் செய்துவிட்டால், பிறகு தேர்தல் வாக்குறுதிகளில் சூழலியல் பிரச்சனை முதலாவதாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் இரண்டாவது பிரச்சனையாக இடம்பெறும்.

இந்த பூமியில் நீங்கள் பார்க்கின்ற ஒவ்வொன்றும் புழு, பூச்சிகள், பறவைகள், விலங்குகள், தாவர இனங்கள், மற்றும் மனிதர்களாகிய நாம் அனைத்துமே மண் பரப்பின் முப்பத்தி ஒன்பது அங்குல ஆழத்திலிருந்துதான் நிகழ்வதாக இருக்கிறது.

நாம் அறிந்திருக்கும் ஒவ்வொரு உயிரினத்தையும் ஊட்டி வளர்க்கும் இந்த மேல்மண்ணுக்குத்தான் உண்மையான பாதிப்பு நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. வளமான மற்றும் ஆரோக்கியமான உயிர்மச் சத்தான மண்ணுக்கு நாம் உத்தரவாதம் அளிக்க முடிந்தால், இந்த பூமியும் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் திறன் பெறும் என்பதுடன், பெருவாரியான மற்ற பிரச்சனைகளையும் நம்மால் எளிதில் கையாள முடியும்.

தற்போது, 95 சதவிகிதத்துக்கும் அதிகமான உலக மக்களுக்கு, அவர்களைச் சுற்றிலும் எழும்பிக் கொண்டிருக்கும் சூழலியல் பேரழிவு குறித்து சற்றும் விழிப்புணர்வு இல்லை. சூழலியல் விழிப்புணர்வு என்பது ஒரு சிறிய மக்கள் கூட்டத்துக்கு மட்டும் உரித்தானதாக இருக்கிறது.

தற்போது, 95 சதவிகிதத்துக்கும் அதிகமான உலக மக்களுக்கு, அவர்களைச் சுற்றிலும் எழும்பிக்கொண்டிருக்கும் சூழலியல் பேரழிவு குறித்து சற்றும் விழிப்புணர்வு இல்லை. சூழலியல் விழிப்புணர்வு என்பது ஒரு சிறிய மக்கள் கூட்டத்துக்கு மட்டும் உரித்தானதாக இருக்கிறது. மேலும், அவர்களுக்கு மத்தியிலும் கூட, சூழலியல் குறித்த கருத்தாக்கம் என்பது, குளிக்கும்போது குறைவான நீர் பயன்படுத்துவது அல்லது பல் துலக்கும்போது குழாயை மூடுவது என்ற அளவில் பெரும்பாலும் வரம்புக்கு உட்பட்டதாகத்தான் இருக்கிறது.

அவர்கள் பயன்படுத்துவது என்ன என்பது குறித்து மக்கள் விழிப்புணர்வாக இருப்பது அற்புதமானது, ஆனால் இது பரந்துபட்ட ஒரு சூழலியல் தீர்வு கிடையாது. சூழலியல் என்பது ஒரு தேர்தல் பிரச்சனையாகும் போதுதான், அது அரசாங்கத்தின் கொள்கையாக உருவெடுக்கும். அதற்குப் பிறகுதான் பெரிய அளவில் பட்ஜெட் ஒதுக்கப்படும், அதன் விளைவாக தீர்வுகள் வெளிப்படும்.

 சூழலியலை மீட்டெடுப்பது லாபகரமானது

இன்றைக்கு, சூழலியலும், பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கும் வகையில், நாம் சமூகத்தைக் கட்டமைத்துள்ளோம். சூழலியலையும், பொருளாதாரத்தையும் தூக்கி நிறுத்தினால், எப்போதும் பொருளாதாரம்தான் வெல்லும். இது உலகெங்கும் நிகழ்வதை நீங்கள் பார்க்கமுடியும். ஆனால் சூழலியலை மீட்டெடுப்பது, உண்மையில் மிகவும் இலாபகரமாக இருக்கமுடியும். தென்னிந்தியாவின் காவிரி நதியை மீட்டுருவாக்கம் செய்வதற்கான எமது காவேரி கூக்குரல் பரப்புரையின் சாரம் இதுதான்.

விவசாயிகள், குறுகிய கால பயிரிடுதலில் இருந்து, நீண்ட கால காடு வளர்ப்புக்கு மர அடிப்படையிலான விவசாயம் அதாவது, மற்ற பயிர்களுடன் மரம் நட்டு வளர்க்கும் வழக்கத்திற்கு மாற்றமடைவதற்கு நாங்கள் செயல் செய்து வந்துள்ளோம். இந்த முறையில், விவசாயிகள் காவேரி நதிப் படுகையில் 242 கோடி மரங்களை நடுவார்கள்.

இது நதிப்படுகையின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை நிழற்குடையின் கீழ் கொண்டுவரும், அதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, மீண்டும் நதியில் நீரோட்டத்தை மீட்டெடுக்கும். அது மட்டுமில்லாமல், அதிகரிக்கும் மண் வளம், மேலான பயிர் சாகுபடியினால் விவசாயிகள் பலனடைவார்கள், மற்றும் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக அவர்களது வருவாய் உச்சமடைகிறது.

தமிழ்நாட்டில், 69,760 விவசாயிகளை நாங்கள் மரப்பயிர் விவசாயத்துக்கு மாற்றியுள்ளோம் என்பதுடன், ஐந்திலிருந்து ஏழு வருடங்களுக்குள், அவர்களின் வருவாய் 300-800% அதிகரித்துள்ளது.