‘நியூ இன்னோவா கிரிஸ்டா’ காருக்கான முன்பதிவு துவக்கம்

நியூ இன்னோவா காருக்கான முன் பதிவை துவங்குவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நியூ இன்னோவா கிரிஸ்டா முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் வெளிவந்திருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் இன்னோவா ஹைகிராஸ் மாடல் காரை அறிமுகம் செய்தது.

இது பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் எலக்ட்ரிக் கார்களாக வெளிவந்திருக்கிறது. அதன் வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம், சிறந்த பாதுகாப்பு வசதி மற்றும் வாகனம் ஓட்டுவதில் மகிழ்ச்சி, தனியாக அல்லது குடும்பத்துடன் பயணம் செய்ய பொருத்தமான காராக இது இருப்பதால், இந்த கார் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது நியூ இன்னோவா கிரிஸ்டா காருக்கான முன்பதிவை டொயோட்டா நிறுவனம் துவக்கி உள்ளது.

இது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு துணைத் தலைவர் அதுல் சூட் கூறுகையில், நியூ இன்னோவா கிரிஸ்டா டீசல் கார் 4 வித மாடல்களில் வெளிவருகிறது. இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் மேம்பட்ட தொழில்நுட்பம், சொகுசான பயணம் மற்றும் பாதுகாப்பை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த காராக இருக்கும்.

நியூ இன்னோவா கிரிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் ஆகிய 2 மாடல் கார்களையும் வாடிக்கையாளர்கள் டீலர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.

50 ஆயிரம் ரூபாய் முன் பணம் செலுத்தி நியூ இன்னோவா கிரிஸ்டா காரை முன் பதிவு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் டீலர்களிடமும், www.toyotabharat.com என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம். நியூ இன்னோவா கிரிஸ்டா ஜி, ஜிஎக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய 4 மாடல்களில் ஒயிட் பியர்ல் கிரிஸ்டல் ஷைன், சூப்பர் ஒயிட், சில்வர், ஆட்டிட்யூட் பிளாக் மற்றும் அவன்ட் கார்ட் ப்ரான்ஸ் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கிறது.