இந்துஸ்தான் கல்லூரியில் ஒரு நாள் கருத்தரங்கம்

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித் துறை சார்பில் திருநங்கைகள் சட்டம் மற்றும் விதிகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

துவக்க விழாவிற்கு தலைமை விருந்தினராக இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் கிரி ராஜ் மற்றும் கோவை மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஐபிஎஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் சமூகப் பணித் துறையின் தலைவர் புனிதா வரவேற்புரையாற்றினார்.

என்ஐஎஸ்டியின் இயக்குநர் கிரி ராஜ், திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றார்.

நிகழ்வில் விஜயகுமார் ஐ.பி.எஸ் பேசுகையில்: திருநங்கைகள் சட்டத்தின் விதிகள் குறித்து மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகள் மற்றும் சுதந்திரம் உள்ளது. இது திருநங்கைகளுக்கும் பொருந்தும் என்றும், அவர்களுக்குத் தேவையான திறன்கள் இருக்கும்போது அவர்களை வேலைக்கு அமர்த்த நாம் ஒருபோதும் தயங்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.