பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு- 8 மாதங்களில் ரூ.10.60 அதிகரிப்பு

பெட்ரோல் விலை கடந்த 2 மாதமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே பெட்ரோல் விலை ஏறுமுகமாக உள்ளது. அதன் பிறகு சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஜூலை 4-ந்தேதி முதல் பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை மிகவும் அதிகரித்து உச்சத்தை எட்டி வருகிறது.  நேற்று லிட்டருக்கு 10 காசு உயர்ந்து ரூ.82.62-க்கு விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. ஒரு நாளில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 51 காசு அதிகரித்துள்ளது. இன்று 1 லிட்டர் பெட்ரோல் உச்சபட்சமாக ரூ.83.13-க்கு விற்கப்படுகிறது. 8 மாதங்களில் லிட்டருக்கு ரூ.10.60 அதிகரித்துள்ளது. பெட்ரோலின் இந்த விலை உயர்வு பொது மக்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதேபோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. நேற்று லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.75.61-க்கு விற்கப்பட்டது. இன்று ஒரேநாளில் டீசல் விலை லிட்டருக்கு 56 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலையும் வரலாறு காணாத வகையில் இன்று லிட்டருக்கு ரூ.76.17-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.