குடியரசு அணிவகுப்புக்கு என்.ஜி.பி மாணவர்கள் 2 பேர் தேர்வு

சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு பேரணியில் பங்கேற்க டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் சென்னையில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை ஒட்டி நடைபெறும் அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையினர் மற்றும் காவல் துறையினர் போன்றோர் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அணிவகுப்பு பேரணியில் டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு இளநிலை கணினி பயன்பாட்டியல் மாணவர் ராகுல் மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலை உயிர்த்தொழில்நுட்பவியல் மாணவர் துரைராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வாகியுள்ள மாணவர்கள் இருவரையும் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி, முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன், புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.