பெண்களின் மன உணர்வை என் புத்தகம் பிரதிபலிக்கும்! – எழுத்தாளர் கனலி

“பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?” தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா? நம் நாட்டில் நிலவும் ஆணாதிக்க போக்கையும், பெண்களின் விருப்பு வெறுப்புகளையும் தன்னில் இருந்து உணர்ந்து, எழுத்துக்கள் மூலம் தனது முதல் புத்தகத்திலேயே வெளிப்படுத்தி உள்ளார் எழுத்தாளர் கனலி.

முகநூலில் நிவேதிதா லூயிஸ் என்பவரால் நிர்வகிக்கப்படும் ‘ஹேர் ஸ்டோரீஸ்’ என்ற பக்கத்தில் பெண்கள் சார்ந்த தனது கருத்துக்களை எழுத தொடங்கிய கனலியின் கருத்துக்களுக்கு பலவேறு தரப்பில் இருந்தும் ஆதரவும், பாராட்டும் கிடைத்தன. இதை அங்கீகரிக்கும் விதமாக இவரது கட்டுரை தொகுப்புகள் புத்தக வடிவில் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது. முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசியத் தலைவர் ஹென்றி பெற்றுக்கொண்டார்.

பெண்கள் சார்ந்த சமூக பிரச்சனைகள், பெண்ணியக் கருத்துக்கள், உரிமைகள், குடும்ப நலம், குழந்தைகள் வளர்ப்பு,பெண்களின் உளவியல் குறித்தான பல்சுவைக் கட்டுரைகளை “பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?” புத்தகத்தில் அடங்கியுள்ளது. முதல் புத்தகத்திலேயே பிறரை திரும்பி பார்க்க வைத்துள்ள எழுத்தாளர் கனலியிடம் நாம் முன்வைத்த சில கேள்விகளுக்கு அவரின் பதில்கள்:

தலைப்பே வித்தியாசமாக உள்ளது என்ன காரணம்? 

இது முழுக்க முழுக்க பெண்ணியம் சார்ந்த பெண்கள் பிரச்சினையை பேசக் கூடிய ஒரு நூல். பெருங்காமம் என்பது நல்ல அழகிய தமிழ் வார்த்தை. ஆனால் இன்றைய ஊடகங்கள் அதை மிகவும் மோசமான வார்த்தையாக மாற்றிவிட்டன. ‘கமம்’ என்கின்ற பழந்தமிழ் வார்த்தையில் இருந்து தான் ‘காமம்’ என்ற சொல் பிறந்தது. ‘கமம்’ என்றால் நிறைவு என்று அர்த்தம். காதலின் பூரண நிறைவு காமத்தில் தான் முடியும். அதனால் தான் இந்த தலைப்பு வைக்கப்பட்டது.

பெண்கள் தன் விருப்பத்தை கணவரிடம் கூட சொல்ல முடியாத நிலையே இந்திய சமுதாயத்தில் நிலவுகிறது. பெண்களின் குரலாக அதை எனது நூலில் வெளிப்படுத்தியுள்ளேன். மனைவியின் ஆசை என்ன, அவர்களின் விருப்பங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளாமலேயே 99 சதவீதம் இந்திய கணவர்கள் இருக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும் என நினைக்கின்றேன். எளிய ஒரு பெண்ணின் மனஉணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த நூலில் கூறியுள்ளேன்.

இந்த நூல் வழியாக நீங்கள் கூற வருவது? 

நான் எழுதிய கட்டுரைகள் முக நூலில் வெளிவந்த போது எனக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. ஒவ்வொருவரும் தங்கள் மனதில் நினைக்கும் கருத்துக்களை நான் பிரதிபலித்துள்ளதாக தெரிவித்தனர். இந்த புத்தகம் மூலமாக பெண்களின் பிரச்சினைகளை ஆண்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

வீட்டில் உள்ள பெண்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வார்கள் என ஆண்கள் நினைக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் விருப்பம், ஆசை இருக்கும் என தெரிந்துக் கொள்ளாமல் ஆணின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே பெண்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அதை இந்த நூலில் சுட்டிக் காட்டியுள்ளேன்.

ஆதியில் இருந்து நாம் தாய் வழி சமூகமாக தான் இருந்தோம். இடைக்காலத்தில் தான் தந்தை வழி சமூகமாக மாறிவிட்டது. இன்னும் அதில் இருந்து மீள முடியவில்லை. பெண்கள் வெளியில் வந்து சுதந்திர காற்றை சுவாசிக்கவும், பொருளாதார சுதந்திரம் அடைவதற்கும் இத்தனை நூற்றாண்டுகள் போராட வேண்டி இருந்தது. இதில் இருந்து இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. அதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.

நீங்கள் முக்கியமாக கருதும் பெண்கள் சார்ந்த சமூக பிரச்சனை எது?

அவர்கள் பெண்ணாக இருப்பது தான் இந்த சமூகத்தில் உள்ள முக்கியமான பிரச்சினையாக நினைக்கின்றேன். பெண் என்ற ஒரே காரணத்தினாலேயே சில இடங்களில் உயர்த்தவும், சில இடங்களில் தாழ்த்தவும் படுகிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும்.

ஒரு சக உயிராக நினைத்துப் பார்த்தாலே போதும். அவர்களுக்கான முதல் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என்றோ, அனைத்து இடங்களிலும் அவர்களை உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்றில்லை. அதே நேரத்தில் ஒதுக்க வேண்டும் என்பதும் கிடையாது. சமமாக நடத்தினாலே போதும்.

திறமை இருக்கும் பெண்களை ஊக்கப்படுத்துவதும், அவர்களை தட்டிக் கொடுப்பவர்களாகவும், உற்சாக படுத்துவர்களாகவும் ஆண்கள் இருக்கவேண்டும்.

இப்புத்தகம் எழுத ஆர்வம் எப்படி வந்தது?

நானும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் தான் இருக்கின்றேன். ஆணாதிக்க சமூகம் என்று தான் இதை கூறவேண்டும். அனைத்து இடங்களிலும் ஓர் ஆணே அனைத்தையும் இயக்குபவனாக உள்ளான். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், அவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும், நடந்து கொள்ளக் கூடாது என்பதை ஆண்களே தீர்மானிக்கின்றனர். அவர்களின் கட்டுபாட்டுக்குள் இருக்கவேண்டும் என நினைக்கின்றனர்.

ஆனால் பெண்கள் இதை பொது வெளியில் வெளிப்படையாக கூற மாட்டார்கள். அப்படி கூறினால் தங்களை எதுவும் தவறாக நினைப்பார்கள் என பெண்கள் கருதுவார்கள். இவை அனைத்தும் தான் என்னை எழுத தூண்டியது. நானும் இந்த பிரச்சினைகளை சந்தித்துள்ளேன், நான் பார்த்த அனைத்து பெண்களும் அப்படி தான் உள்ளனர். ஒரு பெண் கூட நான் முழு சுதந்திரத்துடன் இருக்கிறேன் எனக் கூறியது கிடையாது.

பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வாகவும், ஆண்களுக்கு பெண்களை பற்றி புரிந்துகொள்ள ஒரு முன்னோட்டமாக இந்த நூல் இருக்கவேண்டும் என எழுதினேன். அது மட்டும் இல்லாமல் என் கணவர் எப்போதும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்துக் கொண்டே இருப்பார். நான் எழுதுவதற்கு முக்கியக் காரணமே அவர்தான்.

புத்தக வாசிப்பு எப்போது இருந்து உள்ளது?

சிறுவயதில் இருந்தே எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. குறிப்பிட்டவை என்றில்லாமல், அனைத்து புத்தகங்களையும் படிப்பேன். அதில் இருந்து எனக்கு நல்ல வாசிப்பு அனுபவம் கிடைத்தது. நாளிதழ்களில் நான் எழுதிய நிறைய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அப்போதுதான் கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே, அடுத்து எழுதப் போவதை யோசிப்பேன். வீட்டு வேலைகளை குடும்பத்தார் பகிர்ந்து கொள்வதால் எழுதுவதற்கு அதிக நேரம் கிடைக்கிறது.

புத்தகத்திற்கு வரும் விமர்சனம் பற்றி?

மகாகவி சுப்பிரமணி பாரதியின் கொள்ளு பேத்தி என் புத்தக வெளியீடு நிகழ்விற்கு வந்திருந்தார். அவர் புத்தகத்தை படித்து விட்டு “என்னை நேர்காணல் எடுத்து எழுதியது போலவே இந்த புத்தகம் உள்ளது” எனக் கூறினார். எளிமையான வார்த்தையில், கடினமான சொல்லாடல் இல்லாமல் புத்தகம் உள்ளது என படித்த பலர் என்னிடம் கூறினர். மேலும் இது அனைத்து பெண்களின் மன குமுறல் எனவும் தெரிவித்தனர். அவர்களின் கருத்துக்கள் இன்னும் அதிகம் எழுத வேண்டும் என உற்சாகத்தை கொடுத்தது.