தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி , ஒலிம்பிக் ஜோதியை கையில் ஏந்தி தொடர் ஓட்டம்

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் சத்தியமங்கலத்திலிருந்து கோவை வரை ஒலிம்பிக் ஜோதியை கையில் ஏந்தி ஹெல்மெட் அணிந்து தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழக அரசும் அதனை அமல்படுத்தியுள்ளது. எனினும் பல இடங்களிலும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.இந்த நிலையில் தலைகவசத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் கோவை ஹிந்துஸ்தான் கல்லூரி சார்பில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து கோவை வரை தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டியும் கையில் ஜோதி ஏந்தி தொடர் ஓட்டமாகவும் கோவி நவ இந்தியா பகுதியிலுள்ள கல்லூரியை அடைந்தனர்.சத்தியமங்கலத்திலிருந்து புளியம்பட்டி,அன்னூர்,கோவில்பாளையம் வழியாக சுமார் 84 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டமாக சென்று கல்லூரியை வந்தடைந்த மாணவர்கள் வழி நெடுகிலும் ஹெல்மெட் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்தபடி வந்தனர்.