ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் அனுசரிப்பு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை மற்றும் பாலின சாம்பியன்ஸ் சங்கம் இணைந்து தேசிய பெண் குழந்தைகள் தினத்தைக் கடைப்பிடிக்கும் பேரணியை நடத்தினர்.

கோயம்புத்தூர் எம்ஜிஜி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் தொழில்முனைவோர் மற்றும் உரிமையாளரும், சிறந்த சமூக சேவகி விருது பெற்றவருமான கோதனவல்லி, கோவை பேரூர் ஆர்2 காவல் நிலைய எஸ்ஐ செல்வகுமாரி பேரணியை துவக்கி வைத்தார். முதல் ஆண்டு மாணவர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் பேரூரிலிருந்து பேரூர் செட்டிபாளையம் வரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டனர்.

பங்கேற்பாளர்கள் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்தனர்.  பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான துஷ்பிரயோகத்திற்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது.

மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஹேமா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் கோதனவல்லி, குழந்தைகளிடம் மரியாதை, பாலின சமத்துவம் மற்றும் பெண்களிடம் நேர்மறை மனப்பான்மை பற்றிப் பேசி பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க உதவுமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது அனைவரின் பொறுப்பு என்றும், மாற்றத்தை ஏற்படுத்த நாம் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.