கணுவாயில் சிறுத்தை நடமாட்டம்

கோவை கணுவாய், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள், காட்டுபன்றிகள் நடமாற்றம் அதிகமாக இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டமும் தென்பட்டு வந்தது. கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகர், சோமையனூர் ஆகிய பகுதிகளில் சிறுத்தை ஆடுகளை தாக்கி சென்றது. இதனையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிப்பதற்காக கடந்த இரு மாதங்களுக்கு முன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதனையடுத்து சில நாட்களாக சிறுத்தை தென்படாத நிலையில் தற்போது கணுவாய் அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் தென்பட்டுள்ளது.

சோமையம்பாளையம் யமுனா நகரில் அஸ்வின் என்பவரது கோழி பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4.00 மணி அளவில் வந்த சிறுத்தை ஒன்று கோழி பண்ணையில் இருந்து கோழியை பிடித்து சென்றுள்ளது. இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. எனவே வனத்துறையினர் சிறுத்தையை விரைந்து பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.