கொங்குச்சீமை செங்காற்று – 8

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

 

– சூர்யகாந்தன்

 

குளத்துபாளையத்தின் தென்புறம் உருவாகிக் கொண்டிருக்கும் புது நகரத்தின் பொருட்டு ஊருக்குள் வீடுகளுக்குக் கிராக்கி உண்டாகிக் கொண்டிருந்தது.

“சின்ன ஊடா இருந்தாலே கேட்ட வாடகைக்கு ஆளுக கொண்டாறோம்” என வீடு பிடித்துக் கொடுக்கும் தரகர்களும் உருவாகிக் கொண்டிருந்தனர்.

“….முக்கால் பகுதி போலீஸ்க இங்கெதா இருந்து வேலைக்குப் போறாங்க. அங்கெ முகாம்ல தங்கியிருக்கிறவங்க கொறச்சல் தான்.”

“காய்கறின்னு எத்தனே கொண்டு போனாலும் அங்கெ சீக்கிரமே தீர்ந்து போவுது!”

“இல்லீனா குனியமுத்தூர் போயித்தானோ எது ஒண்ணையும் வாங்கியாரோணும்.”

“….உனிப்பாருங்க. அப்பிடிக்கப்பிடியே புதுசா ஊடுக ஆக ஆக  கடை கண்ணிகன்னு நேறக்கவே வந்துடும்”.

ஏழெட்டு மைல் சுற்றளவிலுள்ள ஊர்களில் இந்தக் குளத்துப்பாளையத்துக் காடுகள் புது நகரமாக மாற்றமடைந்து வருகிற சங்கதி பேசப்படுவதாகவும் ஆகிவிட்டது.

மலைகளிலிருந்து வடக்கு நோக்கி வருகின்ற சுத்தமான் குளிர்ச்சியுடைய காற்று… இந்த வட்டாரத்துக்கே பெரியதொரு வரப்பிரசாதமாக இயற்கையின் கைகளால் வழங்கப்பட்டிருந்தது. மதுக்கரையிலிருந்து மேற்கு திசையில் தொடர் வரிசையாக நீளும் மலைகள் அப்பிடியே சென்று சிறுவாணி மலைகளோடு கலந்து தன்னுடைய பரப்பளவை விரிப்பதாகத் தெரிந்தது.

பாலக்காடு செல்லும் மெயின் ரோடும் மிகவும் அருகாமையிலேயே போனது போக்குவரத்து வசதிகளுக்கும் ஏற்றதாக அமைந்து விட்டது. நகரத்து இரைச்சலிலிருந்து ஒதுங்கி, சற்று நிம்மதியாக இருக்கலாம் என்று விரும்புபவர்களின் எண்ணத்திற்கு ஏற்றார்போலவே விளங்கியது.

விலை கொடுத்து இடங்களை வாங்கிக் கட்டிடம் கட்டுபவர்களில் பாதிக்குப் பாதிப்பேர் ஏற்கனவே கோயமுத்தூரில் சொந்த வீடுகள் உடையவர்களாகவும் இருந்தனர்.

“இப்ப எடம் வாங்கி ஊட்டெக் கட்டிப் போட்டம்னா பின்னே பொறகு இந்த நகரம் “டெவலப்” ஆகுரப்ப கணிசமான வெலைக்கு வித்துப் போடலாமில்லே”

“அட விக்கலீனாப் போவுது! வெய்யில் வேனல் காத்துல எல்லாம் குடியிருக்கிரதுக்கு எத்தனை ஏதுவான எரியாவப்பா இது? இங்கெ பக்கத்தாலே இப்படியொரு அம்சமான நல்ல எடத்தெ எவனாச்சும் வுடுவானா? அவனவன் ஊட்டி, குன்னூர்னு தேடிட்டு போறானுக! அந்த எடங்களுக்கு அடுத்தபடியான குளிர்ச்சி இந்த எடத்தெவுட்டா, இந்தக் கோயமுத்தூர் அதுவும் இப்படிப்பட்ட நிலா மட்டத்துல! சொல்லு…”

“செரித்தான். பின்னே போயி, காரு. ஜீப்புக வெச்சுட்டு மலே ஏறிப்போயித்தான் குளிர்ச்சியே அனுபவிக்கோணும்! இங்கெ அப்பிடியில்லே. நாம இருக்குற ஊர்களேத்தேடி அத்தன தணுப்பும், குளுமையும் மளமளன்னு வருங்துகுறே! நாம சொல்றதுக பொய்யா? வந்து, இங்கெ இருந்து கொஞ்ச நாளாச்சு வசிச்சுப் பாத்தவிகளுக்கு வேற பக்கம் போக மனசு வருமா?”

“கடனேயாச்சும் வாங்கி அஞ்சு சென்டோ பத்து சென்டோ வெலேக்கெரயம் பண்ணிடறது மேலுது. பின்னே எப்பவாச்சும் சவுரியப்பட்டா ஊடு சொந்தமா கட்டிக்கிறது. இல்லாட்டிப் போனா வர்ற லாபத்தே அனுசரிச்சு வித்துப் போடுறது! என்ன கெட்டுப் போச்சு?”

இவைகளையெல்லாம் பலவாறாகக் கேட்டு வந்ததில் மாசய்யனுக்குத் தனது காட்டை விற்காமல், பாதுகாப்பான ஒரு சொத்தாக வைத்திருக்கவே மனம் எண்ணியது!

“…. மத்தவிக காடுகளையெல்லாம் தள்ளி தெகோட்டுலதா நம்ம காடு இருக்குது. அதுனாலே அராவேலைக்கு யார் யாரோ கேக்கிறாங்கன்னு போட்டு நாமொண்ணும் குடுக்க வேண்டியதுமில்லே. அப்பிடியாப்பட்ட நெருக்கடியும் பெருசா இல்லே! கேட்டா, நாங்க குடித்தனம் பண்ண நெலம் தேவையா இருக்குதுன்னு அவிகளுக்குச் சொல்றது. இல்லாட்டிப் போனா ஏக்கராக் கணக்குலே விக்கிறதுக்கு எங்களுக்குச் செரிபடாது! சென்டு கணக்குப் போட்டு வேணும்னா விக்கிறோம்.வாங்கிக்காட்டுகனு சொல்றது.”

இவருடைய யோசனையை நமச்சிவாயம் எற்றுக்கொலள்ளாதவனாக இருப்பது நெருடலையே உண்டு பண்ணி வந்தது. “மத்த ரெண்டுபேரும் நம்மட பேச்சுக்கு ஒத்துட்டாலும் இவனோருத்தந்தான் வெந்தண்ணியேக் கால்லே ஊத்திட்டவனாட்டம் ஓதரியிட்டே திறியறானே.”

தனது வயதையொத்தவர்களிடத்தில் தனியாக இருக்கும் சமயங்களில் சொல்பவராக இருந்தார். இன்னமும் இரண்டு கல்யாண காரியங்கள் பாக்கியிருப்பதையும், அதில் இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் சுப்பையனுக்கு அந்தத் தருணம் நெருங்கி வருவதையும் மனம் சற்று ஆறுதலுடன் நினைவுப்படுத்தியது.

கடைசி மகன் செல்வராசுக்கும், படிப்பு முடிந்த கையோடு, “ஆண்டவன் புண்ணியத்துல ஒரு வேலை கெடச்சுட்டுதுன்னா அப்புறம் அவனுக்கும் ஒரு நல்ல எடமாபாத்து ஒண்ணே முடிச்சு உட்டுப் போடுலாம்”. என்று எண்ணி வந்தார்.

“….கண்ணாலக் காரியம் அடுத்தே இருக்குறப்ப காட்டே விக்கிறம் அப்பிடிப் யிப்பிடின்னு “கந்தரகோலம்” பண்ணிடாதீங்கப்பா.”

நமச்சிவாயத்திடம் பச்சப்பாளித் தோட்டத்து வீரண்ண மாமன் கவனப்படுத்தியும் இருந்தார்.

“எல்லாம் உங்களுக்கு இல்லாம எங்கே போயிடப் போவுது! மூணு மக்களுக்கும் சரி சமமாப் பங்கியுட்டுப் போட்டு சிவனேன்னு உக்காந்துக்கலாம்னுதா உங்க அய்யங்காரனும் இருக்குது! உங்க தம்பிகாரனுக்கு வர்ற பொண்ணோட ராசியினால உன்ர ஊட்லயும் ஒரு கொழந்தைச் சத்தம் கேக்குட்டுமப்பா..! இத்தனே நாளும் இல்லீனாலும் போவுது. உனியாச்சும் மேலெ போறவன் உனக்கும் மொகம் முழிப்பானப்பா…!

அந்த நம்பிக்கையான வார்த்தைகளை அவனால் மறந்து விடமுடியவில்லை.

பொழுது விழுந்து இருட்டுக்கட்டியும் கூட வீடு வந்து அவன் சேராதது நாகரத்தினத்துக்கு வருத்தத்தை வளர்த்தது.

“ஒரு குஞ்சு கொழந்தை ஊட்டுல இருக்குறாப்படி இருந்தா, இந்த ஆளு இப்படியெல்லாம் போகுமா..? என வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

வீதிகளில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறுசுகளின் சப்தம் வாசற்படியில் உட்கார்ந்திருந்தவளுக்குக் கேட்டபடி இருந்தது.