ரோட்டரி கிளப் சார்பில் 150 குழந்தைகளுக்கு செயற்கை கால்கள் வினியோகம்

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் ஏழை குழந்தைகளுக்கு செயற்கை கால் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3201 ன் பதவி ஏற்கவுள்ள சுந்தரவடிவேலு கலந்து கொண்டார். கௌரவ விருந்தினர்களாக ரோட்டரி மாவட்டம் முன்னாள் ஆளுனர் ராஜசேகர் மற்றும் பதி கலந்துகொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட சமூக சேவை தலைவர் மாருதி, மாவட்ட இயக்குனர் மயில்சாமி, உதவி ஆளுனர் சுமித் குமார் பிரசாத், ராகேஷ் குமார் ரங்கா, ரோட்டரி டவுன்டவுன் தலைவர் சுந்தரேஷன், இளைஞர் சேவை மாவட்ட தலைவர் காட்வின் மரியா விசுவாசம், செயலாளர் குமரன், பொருளார் விக்னேஷ், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து காட்வின் மரியா விசுவாசம் கூறியதாவது: “எழுந்து நில், நட” என்ற திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 100 பயனாளிகள் இதன் மூலம் பயன் பெற்று உள்ளனர். ஆனைமலை டொயோட்டா நிறுவனமும், ஏசியன் ஃபேப்ரிக்ஸ் நிறுவனமும் இணைந்து சமூக பொறுப்புனர்வு நிதியை, தங்களின் பங்களிப்பாக இத்திட்டத்திற்கு தந்துள்ளார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 100 செயற்கை கால்களும், இந்த ஆண்டு 150 செயற்கை கால்களும் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 50 குழந்தைகளுக்கு சிறப்பு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட செயற்கை கால்கள், வருடம் தோறும், அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுபடும். அளவுகளுக்கு ஏற்ப ஆண்டு தோறும் புதிய அளவுகளில் செயற்கை கால்களை செய்து தர இருக்கின்றோம்.

இந்த திட்டத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் உலகம் முழுவதிலிருந்தும் பங்கேற்கும் வகையில் “ரோடோ ரைட் ஆர் ரன்” என்ற நிதி திரட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதன் மூலம் கிடைத்த தொகையில் செயற்கை கால்கள் வழங்க முடிந்தது. குறிப்பாக குழந்தைகளை எந்தவித குறையும் இல்லாத மற்ற குழந்தைகளை போல உருவாக்க வேண்டும் எனக் கூறினார்.