என்னவாகும் இரட்டை இலை சின்னம்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அந்த வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரு அணியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27 இல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணியின் சார்பில் தமாகா வேட்பாளர் நின்று தோல்வியைச் சந்தித்தார்.

அதனால், இந்த முறை அதிமுக சார்பிலேயே வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியினரின் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு கூட்டணிக் கட்சியான தமாகா இணங்கி வந்தாலும், அதிமுகவில் தற்போது நிலவி வரும் குழப்பத்தால், அதிமுகவின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அவருக்குத் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், இணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் புலம்பெயர்ந்து வசிப்பவர்கள் வாக்களிக்க வழிகாணும் வகையில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கும் தேர்தல் ஆணையத்தின் கூட்டம் புது தில்லியில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு தனித்தனியாக ஓபிஎஸ், இபிஎஸ்.,க்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதனை, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்காமல், இருமுறை திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின் அடிப்படையிலேயே அவ்வாறு அனுப்பப்பட்டதாக தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு ஏ படிவத்தில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும். அதற்கு தற்போது உள்ள சூழலில் அவர்கள் இணங்கி வருவார்களா என்பது சந்தேகம்.

இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ஜனவரி 23 இல் கூட்ட உள்ளார். அதில் இந்த விவகாரம் குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திடுவதற்கு இணங்கி வந்தாலும், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்க வேண்டும்.

அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவியே இல்லை என்றுதான் அவர் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தைத் திருப்பி அனுப்பியுள்ளார். அதனால், தற்போது அவர் இறங்கி வந்து கையெழுத்திட்டால், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்பதுபோல ஆகிவிடும்.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியது: ஈரோடு கிழக்கு தொகுதியில் யாரை நிறுத்துவது என்பதை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்வர். அதற்குப் பிறகே ஏ படிவத்தில் கையெழுத்திடுவது குறித்து கேள்வி எழும். வேட்பாளர் முடிவு செய்த பிறகே, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க முடியும் என்றார்.

இருவரின் மோதலால் கட்சி பலவீனப்பட்டுவிடக் கூடாது என்பதே அதிமுகவினர் எண்ணாக இருந்து வருகிறது.

யாருக்கு பலம்?

இது குறித்து அரசியல் விமர்சகர் ரிஷி கூறும்போது, இந்தியாவிலேயே இரண்டு முறை முடக்கப்பட்டு மீண்டும் கொடுக்கப்பட்ட சின்னம் இரட்டை இலை தான். தற்போது உள்ள நிலையில் சின்னம் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இவருக்குமே சொந்தமாக உள்ளது.

இந்த இருவரில் ஒருவர் போட்டியிட்டாலும் முடங்குவதற்கான வாய்ப்பே அதிகம். அதுவும் இன்னும் மூன்று வாரங்களுக்குள் மனு தாக்கல் முடிவடைவதால் அதிமுக எடப்பாடி அணி சார்பிலும் சரி, அதிமுக பன்னீர்செல்வம் அணி சார்பிலும் சரி போட்டியிட விரும்புவர்கள் புது சின்னத்திலேயே போட்டியிடும் நிலைமை உருவாகியுள்ளது.

இது யாருக்கு எவ்வளவு பலம் என்பதை கணக்கிட்டு காட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கும் நிச்சியம் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு கணிசமான வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இரண்டு முறை அதிர்ஷ்டத்தில் தப்பிய இரட்டை இலை மூன்றாவது முறை தப்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.