மக்கள் தொகை சரிவு: இன்று சீனா! நாளை இந்தியா!

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், 1961 க்கு பிறகு தற்போது மக்கள் தொகை சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டை விட சுமார் ஒன்பது லட்சம் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் தொகை குறைந்தால் நல்லது தானே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் உண்மை அவ்வாறு அல்ல என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சீன அரசாங்கம் 1979 ஆம் ஆண்டு நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக “ஒரு குடும்பம், ஒரு குழந்தை” திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கொள்கையை மீறும் குடும்பங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தியாவின் பல பகுதிகளைப் போலவே “ஆண் குழந்தை மோகம்” கொண்ட சீன நாட்டில் இந்த “ஒரு குழந்தை திட்டம்” எதிர்பார்த்த பலனை தரவில்லை. கூடவே ஆண் பெண் விகிதாச்சாரம் குறைந்து புதிய சிக்கல்கள் தலை தூக்கத் தொடங்கின.

இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு “ஒரு குடும்பம் ஒரு குழந்தை திட்டம்” ரத்து செய்யப்பட்டது. சீன மக்கள் குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2021 ஆம் ஆண்டு இது மூன்று குழந்தைகளாக அதிகரிக்கப்பட்டது. என்றாலும் பல ஆண்டுகளாக அமலில் இருந்த ஒற்றை குழந்தை திட்டத்தின் தாக்கம், மற்ற வளர்ச்சித் திட்டங்களை எதிர்பார்த்த அளவு செயல்படுத்த முடியாமல் செய்தது.

இளைஞர்களிடையே நிலவுகின்ற வேலைவாய்ப்பு பிரச்சினை, எதிர்பார்ப்புக்கு ஏற்ற வருவாய் இல்லாதது, திருமணம், குழந்தை பிறப்புபோன்ற குடும்பம் சார்ந்த திட்டங்களை தள்ளிப் போடுவது ஆகியனவும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு ஒரு காரணமாக அமைந்தன.

தற்போதைய நிலையில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை சீனாவில் சரிந்துள்ளது. இப்போது மக்கள் தொகை குறைந்துள்ளதால் என்ன பாதிப்பு என்று பார்த்தால், தொலைநோக்கில் பல சிக்கல்கள் காத்திருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த மக்கள் தொகை சரிவு தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலை நீடிக்கும். நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் மக்கள் தொகை குறைவதால் சீனாவின் தொழிலாளர் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் குழந்தை பிறப்பு குறைவதால், முதியவர்கள் எண்ணிக்கை உயரும். கூடவே அவர்களுக்கு தேவைப்படும் சுகாதாரம், மருத்துவம் போன்ற பிற சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான சுமையும் அரசாங்கத்துக்கு அதிகரிக்கும். இன்னொரு புறம் உழைக்கின்ற பருவத்தினரின் எண்ணிக்கை குறைவதால், நாட்டின் உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது என்ற நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளிலும் இந்த மக்கள் தொகை சரிவு காணப்படுகிறது. முதியவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றால் மெல்ல பொருளாதார நெருக்கடி நிலை உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று பரவலால் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள சீனா இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் இரும்புத்திரை நாடான சீனாவில் நடைமுறை வேறு. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் நடைமுறை வேறு. இந்த சூழலில் இந்தியாவிலும் எதிர்காலத்தில் இந்த நிலை வரலாம். மக்கள் தொகை சரிவு ஏற்படலாம்.

ஏற்கனவே இன்றைய இந்தியாவின் வளங்களில் ஒன்றாக மனித வளம் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் சக்தி திகழ்கிறது.  நாட்டின் மேம்பாட்டை உருவாக்கும் அடிப்படை கருவிகளில் ஒன்று இளைஞர்களின் உழைக்கும் திறனாகும். எனவே இன்றைய சூழலில் உலக அளவில் வளர்ந்து வருகின்ற இந்திய நாட்டில் நாம் எச்சரிக்கையாக இயங்க வேண்டியது அவசியமாகிறது.

ஒரு காலத்தில் வல்லரசாகவும் பொருளாதாரம் வளம் வாய்ந்ததுமாக கூறப்பட்ட அமெரிக்கா,  ரஷ்யா போன்றவற்றின் நிலை மாறிவிட்டது. சமீப காலமாக இவ்வுலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லமை பெற்ற நாடுகளில் ஒன்றாக இருந்த சீனா தற்பொழுது பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளது. கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது கண்கூடாக தெரிகிறது.

பொருளாதார நிலையில் முன்னேறி செல்வதற்கு சில நிலைப்பாடுகள் தேவைப்படுகின்றன.

அவற்றில் இந்த மக்கள் தொகையை சமநிலையில் பராமரித்தலும் ஒன்று என்று அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். எனவே அவற்றை இப்போது இருந்தே கவனத்துடன் கண்டறிந்து திட்டமிட்டு செயல்படுவது இந்தியாவுக்கும் அவசியமாகும்.