தமிழ்நாட்டில் சுயநிதி (தன்னாட்சி) கலைக் கல்லூரிகளில் ஓர் புதிய சாதனை!

இந்துஸ்தான் கல்லூரிக்கு ‘ஏ’ ++ தர வரிசை

கொங்கு நாட்டின் தொழில் குழுமங்கள் கல்வி, மருத்துவம் ஆகிய சேவை துறைகளிலும் ஈடுபட்டு செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் கோவை இந்துஸ்தான் தொழிற்குழுமத்தால் 1990களில் தொடங்கப்பட்டது தான் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும்.

இந்தக் கல்லூரி 1998 ஆம் ஆண்டு தரமான கல்வி வழங்குவதையே முதன்மையான நோக்கமாக கொண்டு 144 மாணவர்களுடன் துவங்கப்பட்டது. இதன் கீழ் இன்று சுமார் 9000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.

தொடக்கத்தில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த கல்லூரி, 2015 ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி உரிமை பெற்றதாக தரம் உயர்ந்தது. தற்போது 32 இளநிலை துறைகளையும், 15 முதுநிலை துறைகளையும் கொண்டுள்ளதோடு, 10 துறைகளில் எம்.பில்., பி.ஹச்டி படிப்புகளையும் வழங்கி வருகிறது.  370 ஆசிரியர் பணியாளர்களும், 100 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் உள்ளனர். மதிப்பு அடிப்படையிலான கல்வியை வழங்குவதும், வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுக, மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறனை வெளிக்கொணருவதையும் முக்கியமான கொள்கையாக இந்தக் கல்லூரி கொண்டுள்ளது.

T.S.R. கண்ணையன்
நிறுவனர் மற்றும் தலைவர், இந்துஸ்தான் கல்வி குழுமம்

இக்கல்லூரியின் சிறப்புகளில் முதலிடம் வகிப்பது கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் மீது காட்டும் அக்கறை தான் என்று சொல்ல வேண்டும். வழக்கமான அனைத்து கல்லூரி நடைமுறைகளோடு ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தது 20 மாணவர்களுடன் நேரடி தொடர்பிலிருந்து அவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருவது இதனை உறுதி செய்யும். மேலும் மாணவர்கள் முன்னேற்றம் குறித்து பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்வது இன்னும் சிறப்பு.

இரண்டாவதாக உட்கட்டமைப்பு வசதிகள், இதுபோல ஒரு பரந்து விரிந்த உட்கட்டமைப்பு வசதிகள் மிக்க பசுமை வளாகம் நகரத்திற்குள் இல்லை என்றே சொல்லலாம். நிர்வாகம் மற்றும் ஆசிரியர் உறவு, ஆசிரியர் மற்றும் மாணவர் உறவு என அனைத்திலும் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த ஈடுபாடும், கவனமும் தான் இந்துஸ்தான் கல்லூரியை தேசிய அளவிலான தரவரிசையில் முதல் வரிசையில் இடம்பெறச் செய்து, (நாக்) ‘ஏ’ ++ அந்தஸ்த்தைப் பெற வைத்துள்ளது.

கல்லூரிக்கு நாக் சக குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், 4 மதிப்பெண்களுக்கு 3.66 மதிப்பெண்களுடன் ‘ஏ’++ கிரேடு வழங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி 3.66 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் உள்ள சுயநிதி தன்னாட்சி கல்லூரிகளிலேயே அதிக தரப்புள்ளிகள் பெற்றுள்ளது.

சரஸ்வதி கண்ணையன்
நிர்வாக அறங்காவலர், இந்துஸ்தான் கல்வி குழுமம்

இதற்காக கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, ஆசிரிய உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களை இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் நிர்வாக செயலாளர் பிரியா சதிஷ்பிரபு ஆகியோர் பாராட்டினர்.

நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டில், இது ஒரு பெரிய கௌரவம் மற்றும் மிகப்பெரிய சாதனை என்றும், வரும் ஆண்டுகளில் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் சமூகத்திற்கு சேவை செய்ய நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்கள் மேம்பாடே எங்கள் இலக்கு!

இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் பேசுகையில்: எங்கள் கல்வி நிறுவனத்தைப் பொறுத்தவரை மனதுக்கு இசைந்த,  சமூகத்துக்கு உதவுகின்ற ஒரு கல்விப்பணியை செய்கின்றோம் என்பதே முதன்மையானது ஆகும்.

இந்த கல்லூரியின் உட்கட்டமைப்பு, மற்ற வசதிகள், ஆசிரியர்கள் என்று பலவற்றின் மீது அக்கறை செலுத்தினாலும், நிர்வாகம் மாணவர்கள் மீது காட்டும் அக்கறை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.  ஒவ்வொரு மாணவரும் தனித்திறமை உள்ளவர்கள். அவர்களை கல்வி பெற்றவர்களாக மட்டுமின்றி, தகுதிமிக்க குடிமக்களாக உருவாக்குவதையும் எங்களது கடமையாக கருதுகிறோம்.

தன்னாட்சி உரிமை பெற்றுள்ள எங்களது கல்வி நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் எப்பொழுதும் மாணவர் மேம்பாடு குறித்தே இருக்கும். இதற்கு பலவகையிலும் ஆசிரியர்களும், மற்ற பணியாளர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

இவ்வாறு இளைய தலைமுறை முன்னேற்றத்திற்காக கல்லூரி நிர்வாகம் செயல்படுவதன் காரணமாகத்தான் நாக் எனும் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசை பட்டியலில் அங்கீகாரம் பெற்று,  மதிப்பெண் தரவரிசையிலும் 3.66 எனும் பெருமைமிகு தகுதியை பெற்றிருக்கிறோம்.

இதற்கு உறுதுணையாக இருந்த நிர்வாகக் குழுவினர், பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளோம்!

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கல்லூரி முதல்வர் பொன்னுசாமி கூறியதாவது: கடந்த டிசம்பர் 11, 12 ஆம் தேதிகளில் நாக் கமிட்டி கல்லூரிக்கு வருகை தந்தது. இந்தக் குழு பாடத்திட்டம், உட்கட்டமைப்பு, கல்லூரியின் செயல்பாடுகள் என பலவற்றை ஆய்வு செய்து, 3.66 மதிப்பெண்களுடன் ஏ ++ கிரேடு வழங்கியுள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் இருக்கக் கூடிய சுயநிதிக் (தன்னாட்சி) கல்லூரிகளிலேயே முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளோம். இதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக பல செயல்பாடுகளையும், முயற்சிகளையும் எதிர்காலத்தில் செய்யவிருக்கிறோம்.

அந்த வகையில் தேசிய கல்வி கொள்கையில் சொல்லப்பட்டுள்ள திறன் மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த தொழில்துறை திட்டம் ஆகியவற்றையும் செயல்படுத்தியுள்ளோம்.

ஏற்கனவே எங்கள் கல்லூரியில் ஒருங்கிணைந்த தொழில்துறை திட்டம் சார்ந்த பயிற்சிகளை நடத்தி வருகிறோம். இதை இன்னும் அதிகப்படுத்தி கல்லூரியில் உள்ள அனைத்து துறைகளுக்கும் இத் திட்டத்தினை வழங்கி, அதன்மூலம் திறன் வளர்ச்சியை மாணவர்களுக்கு கொடுத்து, நல்ல வேலைவாய்ப்பில் அவர்கள் சேரவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம்.

பல வெளிநாட்டு பல்கலைகழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளோம். இதை  அதிகப்படுத்தி, பிற நாட்டில் உள்ள பல்கலையுடன் இணைந்து அதிக செயல்பாடுகளை செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம்.

கல்லூரியில் ஏற்கனவே இன்குபேஷன் சென்டர் உள்ளது. இருப்பினும் இன்னும் சில சென்டர்களை துவங்கும் போது மாணவர்களின் இன்டெர்ன்ஷிப் பயிற்சி, செய்முறை பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.  பல வகையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் சிறப்பாக செயல்பட இருக்கிறோம். கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.