கற்பகம் நிகர்நிலைப் பல்கலையில் பட்டமளிப்பு விழா

கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 13 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூத்ததுணைத் தலைவர் சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 2179 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார்.

இவ்விழாவில், 42 ஆய்வாளர்கள் முனைவர் பட்டமும், 48 முதுநிலை மாணவர்கள் தங்கப்பதக்கமும் பெற்றனர். விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் ராமசாமி தலைமையேற்றார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் இராச. வசந்தகுமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர் சுப்ரமணியன் பட்டமளிப்பு விழாவில் பேசியதாவது: இளைஞர்களின் எதிர்காலம் கனவுகளால் கட்டமைக்கப்படுகின்றன. கனவுகள், தன்னம்பிக்கையால் வலுப்பெறுகின்றன. வலுவான கனவுகள் சிறந்த முயற்சியாக வெளிப்படுகின்றன, சிறந்த முயற்சியிலும் ஏற்படுகிற தடைகளை என்றும் குறையாத ஆர்வத்தால் மாணவர்கள் வெல்லலாம்.

புதியவற்றைக் கண்டடைகின்ற குறையாத ஆர்வமே கனவுகளாக மிளிர்கின்றன. அவை பொதுநலச் சிந்தனையால் சிறப்பு பெறுகின்றன. இன்று பட்டம் பெற்றுள்ள மாணவர்களிடம் பொதுநல மனப்பான்மை நிலைபெறவேண்டும். அறிவும், திறனுமாகிய கல்வியின் பயன் சமுதாயத்துக்கு நிறைவாகச் சென்றடைவதற்கு மாணவர்கள் இன்று உறுதியேற்க வேண்டும்.

மாணவர் திறனே, காலந்தோறும் புதிய தொழில்நுட்பங்களாக மேம்படுகின்றன. அவை பொதுநல நோக்கில் நாட்டுக்குப் பயன் சேர்த்தால் மட்டுமே, மாணவர்கள் பெற்ற கல்வியின் பயன் நிறைவு பெறுகிறது. கற்பகம் பல்கலைக்கழகத்தின் வாயிலாக பெற்றுள்ள பட்டத்தால், நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்ப்போம் என்றார்.

பட்டமளிப்பு விழாவில் தாளாளர் தமயந்தி வசந்தகுமார், கற்பகம் நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் முருகையா, கல்வி பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேங்கடாசலபதி, பதிவாளர் ரவி, முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.