பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் தான் குடும்ப உறவுகள் நிலைக்கும்!

– முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் பேச்சு

எழுத்தாளர் கனலி எழுதிய, பெண்கள் சார்ந்த சமூக பிரச்சனைகள், பெண்ணியக் கருத்துக்கள், உரிமைகள், குடும்ப நலம், குழந்தைகள் வளர்ப்பு,பெண்களின் உளவியல் குறித்தான பல்சுவைக் கட்டுரைகள் அடங்கிய “பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?”  என்ற புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வள்ளிதாசன் வரவேற்புரை வழங்கினார். எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் நிவேதிதா லூயிஸ் நூல் அறிமுக உரையாற்றினார்.  விழாவிற்கு தலைமை தாங்கி, முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசியத் தலைவர் ஹென்றி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் முகமது ஜியாவுதீன் பேசியதாவது:  பெண் விடுதலையை ஆணிடம் எதிர்பார்க்க முடியாது என்று தந்தை பெரியார் கூறுவார். ஆண் பெண்களுக்கு உரிமையும், சமத்துவமும் தருவான் என்று பெண்கள் நம்புவது, பாலைவனத்தின் வெயிலிலேயே ஒரு தவளை, பாம்பு படம் எடுக்கும்போது அதன் நிழலில் இளைபாறுவதற்கு சமம் என்று கூறுகிறார்.

பெண்களைப் பற்றி எழுதும் ஆண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பாரதி, பெரியார் ஆகிய ஆண் எழுத்தாளர்களின் புத்தகங்களை பெண்கள் வாசிக்கவேண்டும். பெண்களின் உரிமை குறித்து இவர்கள் எழுதிய எழுத்துக்கள் மற்றும் சிந்தனைகள் 20 ஆம் நூற்றாண்டில் இருந்தே வெளிப்பட்டு இருக்கிறது.

எல்லா மதங்களிலும் பெண்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என எழுதுகிறவன் ஒரு ஆணாகத்தான் இருக்கிறான். குடும்ப அமைப்பு காப்பாற்றபட வேண்டும் எனில், அது பெண் சார்ந்ததாகவே இருக்கிறது. சாதி, மதம் போன்ற கட்டமைப்பு பெண்களை மையப்படுத்தியே நகர்கிறது. ஆனால் ஆண்களுக்கு அதில் எந்த பொறுப்பும் இல்லை.

குடும்ப நல நீதிமன்றங்களில் நிறைய விவாகரத்து வழக்குகள் உள்ளன. காரணம், ஒரு பெண் பேச எழுகிறாள் என்பதையே ஆண்களால் ஜீரணிக்க முடியவில்லை. சங்கப் பாடல்களில் இருக்கும் பெண்களைப் போல இன்று இருக்கும் பெண்களை எதிர்பார்க்க முடியாது. ஆண்களுக்கு தான் நாம் கற்றுத்தரவேண்டியது உள்ளது.

பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் தான் குடும்ப உறவுகள் நிலைக்கும். பல தடைகளை தாண்டி பெண்கள் பேச எழுந்துள்ளது ஒரு நல்ல அடையாளமாக உள்ளது. இந்த அடையாளங்களை நாம் கொண்டாடுவோம் எனப் பேசினார்.