கோவையில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களை தூய்மைபடுத்தி நோபல் உலக சாதனை

கோவையை தலைமையிடமாக கொண்டு 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட க்ளீன் டச் நிறுவனம் வீடு மற்றும் அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் 200 க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தூய்மை இந்தியாவை வலியுறுத்தும் விதமாக கோவையில் புதிய சாதனை செய்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ளூர், வெளியூர் என மூன்று பேருந்து நிலையங்கள், மற்றும் உக்கடம், சிங்காநல்லூர், சாய்பாபாகாலனி உள்ளிட்ட ஆறு பேருந்து நிலையங்களையும் ஒரே நேரத்தில் 600 பேர் இணைந்து தூய்மைபடுத்தி இந்த சாதனையை செய்துள்ளனர்.

முன்னதாக ‘புது பொலிவுடன் கோவை’ என்ற சாதனை துவக்க விழா க்ளீன் டச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கலந்து கொண்டு சாதனை நிகழ்வை துவக்கி வைத்தார்.

இதில் துணை மேயர் வெற்றி செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாதனை நிகழ்வு குறித்து அனீஷ் கூறுகையில்: நோயற்ற வாழ்விற்கு தூய்மையான சூழல் அவசியம். அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சாதனையை செய்ய முன்வந்ததாக தெரிவித்தார்.

ஹிந்துஸ்தான் ஸ்கௌட் அண்ட் கைட் இணைந்து வழங்கிய சாதனையை, தீர்ப்பாளர் அரவிந்த் கண்காணித்தார். நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் சாதனை புரிந்த க்ளீன் டச் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாகி ரேஷ்மா மனோகருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்.