வாழைக்கான விலை முன்னறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வாழைக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்த செய்திக் குறிப்பில், இந்தியாவில் ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாநிலங்களாகும்.

தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டு, வாழை 1.01 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 39.39 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக கோயம்புத்தூர், தேனி, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. திருச்சி, திருநெல்வேலி, கடலூர், தேனி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை முக்கிய வாழைக்கான சந்தையாக தமிழ்நாட்டில் உள்ளது. இவற்றில் அதிகமாக திருச்சி சந்தையிலிருந்து வாழை பிறபகுதிகளுக்கு அனுப்படுகிறது.

தற்போது, திருச்சி சந்தைக்கு லால்குடி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, முசிறி, நாமக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலிருந்து அதிகமாக அனுப்பப்படுகிறது. வர்த்தக மூலங்களின்படி, பண்டிகை காலங்கள் காரணமாக வரும் மாதங்களில் வாழையின் தேவை அதிகரிக்ககூடும்.

கடந்த 20 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தைகளில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகளையும் மேற்கொண்டதில், பிப்ரவரி – மார்ச், 2023 மாதங்களில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 20-25, கற்பூரவள்ளி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 23-28 மற்றும் நேந்திரன் வாழையின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ.40-45 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கபடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.