திசை மாறுகிறதா திரைப்பட ரசனை?

தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அம்சங்களில் ஒன்றாக திரைப்பட ரசனையும் வளர்ந்து வருகிறது. 1940 களில் தொடங்கி இன்று வரை அது கொடி கட்டி பறக்கிறது. அந்தக் காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதர் – பியூ. சின்னப்பா தொடங்கி எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன் பிறகு ரஜினிகாந்த் – கமல்ஹாசன் என்று வளர்ந்து இன்று அஜித் – விஜய் என்று வந்து நிற்கின்றது.

திரைப்படம் பார்ப்பது, அது சார்ந்த ரசனை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அந்த ரசனை சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுது அனைவரும் அதனை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் திரைப்படம் சார்ந்த பல  முன்னுதாரணங்கள் உண்டு.

திரைப்படத்துறையில் ஜொலித்து விட்டு, அரசியல் களத்தில் வெற்றி கண்ட சாதனையாளர்களும் இங்கு உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா (இடையில் வி. என்.ஜானகி) என்று தமிழ்த் திரையுலகம் சார்ந்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் பதவியில் அமர்ந்த வரலாறும் உண்டு. அவர்களின் வெற்றியில் திரைப்படத் துறைக்கும் ஒரு பெரும் பங்கு உண்டு.

ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் திரைப்பட நடிகர்கள் அரசியலில் அவ்வளவு செல்வாக்கு செலுத்துவதாக கூற  முடியவில்லை. ஒவ்வொரு கட்சியிலும் திரைத் துறையினர் இருந்தாலும் முன்பு இருந்த பெரும் தாக்கம், தற்போது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும்  திரைப்படத்துறை பல்வேறு நவீன மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் இக்காலத்தில் கண்டு வருகிறது. தமிழகத்தின்  திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் உலக தரத்தில் சாதனை படைத்து வருகிறார்கள்.

இந்திய அளவில் கே.ஜி.எப், ஆர்.ஆர்.ஆர் போன்றும், தமிழில் பொன்னியின் செல்வன் படமும் பிரமாண்ட தயாரிப்புகளாக திரைக்கு வந்துள்ளன. பல நூறு கோடி ரூபாய் செலவில் திரைப்படம் தயாரித்து வெளியிட்டு லாபம் சம்பாதிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

ஒரு காலத்தில் திரைப்பட விளம்பரம் என்பது போஸ்டர், கட் அவுட், முழு பக்க விளம்பரம் என்று இருந்த நிலை மாறி இன்று டீசர், ட்ரெய்லர், பாடல் வெளியீட்டு விழா, சாஃப்ட் லான்ச் என்று பல முன்னெடுப்புகள் வருகின்றன. கூடவே அந்த படங்களை திருட்டுத்தனமாக காப்பியடித்து பரப்புவதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதிப்பது என்பது ஒரு பெரும் சிரமமாகவே மாறி வருகிறது.

அதற்காக பல புதிய முறைகள் அறிமுகமாகி வருகின்றன. அதில் இந்த தடவை நடு இரவு காட்சி அறிமுகம் ஆகியிருக்கிறது. இரவு ஒரு மணிக்கு புதிய படங்கள் திரையிடப்பட்டன. அதைப் போலவே வழக்கத்தைவிட அதிக அளவு பணம் கொடுத்து முன்பதிவுகளும் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் அந்த இரவில் பல இடங்களில் ஏற்பட்ட குழப்பமும் தள்ளுமுள்ளும் சொல்லி மாளாது . ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் செய்த ரகளையில் கதவுகள், கண்ணாடிகள் உடைந்தன. காவல்துறை அழைக்கப்பட்டது. விஷயம் தடியடி வரை போனது. ரசிகர்களின் ஆரவாரத்தின் உச்சகட்டமாக 19 வயது இளைஞர் இளம் வயது ரசிகர் ஒருவர் பலியாகி இருக்கிறார். ஏன் இந்த நிலை?  பல லட்சக்கணக்கான ரசிகர்கள் முண்டியடித்து அந்த முதல் காட்சிகளில் பார்க்கும் உத்வேகத்தை, அவலத்தை உருவாக்குவது யார்?

இதில் இரண்டு முக்கிய நடிகர்களிடையே போட்டி போன்ற நிலை உருவாக்கப்பட்டு நிலைமை முற்றி ஆங்காங்கே மோதல் ஏற்படும் சூழலும் ஏற்படுகிறது. பல இடங்களில் சாதாரண நடுத்தர, ஏழைகளின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களே ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து இப்படி திரையரங்கின் முன் கூட்டம் போடுவதும், ஆட்டம் போடுவதுமாக இருக்கிறார்கள்.  கேட்டால் இளம் ரத்தம் அப்படித்தான் என்று சொல்வார்கள்.

ஆனால் அவர்களுக்கு நேரடியாக பொழுதுபோக்கு என்பதைத் தவிர இதில் வேறு பயன் எதுவும் இல்லை. இப்படி இருக்கும் பொழுது இதனை ஊக்குவிப்பவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. இனி பழைய அறநெறி எல்லாம் இங்கு சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கேட்பதற்கும் ஆளில்லை.

என்றாலும் நடக்கின்ற சிக்கல்களையும், நடக்கப் போகின்ற சிக்கல்களையும், விபத்துகளையும்  தவிர்க்க முடியும். அதற்கு ஏற்றாற் போல அரசாங்கமும், திரைப்பட தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், பொதுமக்களும் சேர்ந்து இதில் ஒரு பொது நடைமுறையை உருவாக்க வேண்டும். திரைப்பட ரசனையை ஒரு வரையறைக்குள் கொண்டு வர வேண்டும்.  திசை மாறிப் போய் சமூகத்தில் ஏற்படும் சேதங்களை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.