இந்தியாவில் 2வது ஆதியோகி – பெங்களூரு அருகே நாளை திறப்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் நாளை ஜனவரி 15ம் தேதி திறக்கப்பட உள்ளது.

சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் ஆதியோகி திருவுருவத்தை திறந்து வைக்க உள்ளார். கர்நாடக மாநில ஆளுநர் தவார் சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட விருந்தினர்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும், இந்த விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும் ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மேலும், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இவ்விழாவை சத்குரு செயலி மற்றும் சத்குரு யூடியூப் சேனல், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேனல்களில் நேரலையில் காணலாம்.

கோவையில் உள்ள ஆதியோகி திருவுருவத்தை நரேந்திர மோடி கடந்த 2017ம் ஆண்டு திறந்து வைத்தார். இதையடுத்து, ஆதியோகியை தரிசனம் செய்வதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் கோவைக்கு வருகை தருகின்றனர். ஆதியோகி திருவுருவமானது உலகளவில் மிகப்பெரிய மார்பளவு சிலை என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.