தூத்துக்குடி வந்த சொகுசு கப்பல்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு முதல்முறையாக சுற்றுலாப் பயணிகளின்  சொகுசு கப்பல் வந்திருக்கிறது.  இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 698 வெளிநாட்டுப் பயணிகள் தூத்துக்குடிக்கு சுற்றுலாவாக வந்தடைந்தனர்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து `எம்.எஸ். அமிரா’ என்ற பயணிகள்  சொகுசு  கப்பலில்  கடந்த மாதம் 22-ம் தேதி  698 சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டது. வரும் ஏப்ரல் 26-ம் தேதி வரை 125 நாட்களில் 25 நாடுகளுக்குச் செல்லும் இந்தக் கப்பல், கடந்த 28-ம் தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

கப்பலை விட்டு இறங்கிய சுற்றுலாப் பயணிகளுக்குத் தமிழர்களின் பாரம்பரிய வாத்தியங்களான நாதஸ்வரம், தவில் இசை முழங்க ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டத்துடன் கூடிய உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பேருந்துகளில் சென்று பார்வையிடுகின்றனர்.

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து  ஆகிய நாடுகளில் இருந்து  698 பயணிகள் பயணிக்கிறார்கள். இவர்களுடன் 386 மாலுமிகளும் பயணிக்கிறார்கள். இக்கப்பல் 204 அடி நீளம், 92அடி உயரம் 13 அடுக்குகளுடன்  உடையது. இதில், 413 அறைகள் மற்றும் நீச்சல் குளம், நூலகம், பூங்கா  உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் அடங்கியுள்ளது.