சிறைச்சாலையை அறச்சாலைகளாக மாற்ற ஓர் புதிய முயற்சி!

சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்காக உள்ள நூற்றுக்கணக்கான அரங்குகள் மத்தியில் வித்தியாசமாக சிறை துறையின் சார்பில் புத்தகம் வாங்குவதற்காக ஒரு அரங்கு வைத்து இருக்கிறார்கள்.

கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பில் சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வீர் என்ற வேண்டுகோளோடு சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அந்த அரங்கில் சிறையில் இருப்பவர்கள் படிப்பதற்காக சிறைச்சாலை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோளுடன் ஒரு பெட்டி வைத்திருக்கிறார்கள்.

சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவி ஆதிரை ஆயிஷா மற்றும் அமெரிக்காவிலிருந்து பள்ளி விடுமுறையில் சென்னை வந்துள்ள ஏழாவது படிக்கும் மாணவன் ஹாரிஸ் ஜமீல் ஆகியோர் புத்தக கண்காட்சியில் உள்ள இந்த அரங்கில் காந்தி, காமராஜர் பொன்மொழிகள் அப்துல் கலாம், விவேகானந்தர், தந்தை பெரியார், வ.உ.சி சிந்தனைகள், பகத்சிங் நான் ஏன் நாத்திகன் ஆனேன், பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானால் உள்ளிட்ட 11 புத்தகங்களை வாங்கி பரிசளித்தார்கள்.

இந்த நிகழ்வில் ஆதிரை ஆயிஷாவின் தந்தை நீதிபதி முகமது ஜியாவுதீன், நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் ஐஏஎஸ், சென்னை சிறைத்துறை டிஐஜி முருகேசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இது தொடர்பாக நீதிபதி முகமது ஜியாவுதீன் தெரிவித்ததாவது: ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது 100 சிறைச்சாலையின் கதவுகள் மூடப்படுகின்றன என்று விக்டர் ஹியுகோ என்ற மேல்நாட்டு அறிஞர் தெரிவித்துள்ளார்.

ஒரு சாதாரண வழக்கறிஞராக தென்னாப்பிரிக்கா சென்ற காந்தியை மகாத்மா ஆகவும், மாபெரும் தலைவராகவும் மாற்றியது அவர் வாசித்த புத்தகங்கள் தான் என்ற வரலாற்றை நாம் அறிவோம்.

தமிழ்நாடு அரசும், பதிப்பாளர் சங்கமும் இணைந்து சென்னையில் நடத்தும் புத்தக கண்காட்சியில் இந்த ஆண்டு நிறைய அரங்குகளும், பன்னாட்டு புத்தக கண்காட்சியும் நடைபெறும் சூழலில், தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளை அறச்சாலைகளாக மாற்றும் முயற்சியாக சிறைவாசிகள் வாசிக்க நன்கொடையாக புத்தகம் பெறுகிற அரங்கு வைத்திருக்கிறார்கள். இது புதுமையான முயற்சி ஆகும்.

புத்தக கண்காட்சிக்கு வருகிற ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை வாங்கி பரிசளிக்க முன்வர வேண்டும். ஒருவர் ஒரு புத்தகம் வழங்கினால் கூட மிகச் சிறப்பான நூலகத்தை சிறைச்சாலைகளில் உருவாக்க முடியும். அதன் மூலம் சிறையில் இருப்பவர்களை திருத்தவும், நல்ல சிந்தனை உள்ளவர்களாக மாறவும், சிறை வாழ்வு முடிந்து வெளிவரும் போது மனிதநேயம் உள்ளவர்களாகவும், சிறந்த மனிதர்களாகவும் விளங்க வாய்ப்பு இருக்கும்.

படித்த புத்தகங்களைக் கூட நன்கொடையாக வழங்கலாம். இவ்வாறு வழங்குவதன் மூலம் இந்தியாவில் முதல் இடத்தில் வழிகாட்டுகிற தமிழ்நாடு சிறைச்சாலையை அறச்சாலைகளாக மாற்றும் நிகழ்விலும் முதலிடம் பெரும். அதற்கு உதவ எல்லோரும் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.