வாழைத்தார் விலை மற்றும் விற்பனை கடும் சரிவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. குறிப்பாக பவானி ஆற்றுப்பகுதியில் அதிகம் வாழைகளை பயிரிடப்படுகிறது. வாழைகள் நன்கு காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்தபோது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டியது.இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரம் பயிரிட்டிருந்த வாழைகள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாரான வாழை குலைகளை அறுவடை செய்ய முடியாமல் போனதால் வாழைகள் அழுகி நாசமானது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் வாழை நல்ல விளைச்சலை கண்டது. பெரும்பாலும் ஓணம் திருவிழாவிற்காக கதளி, நேந்திரன், பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, தேன் வாழைகள் அதிகம் பயிரிடப்பட்டிருந்தன. கேரளாவில் மழை காரணமாக ஓணம் ரத்து செய்யப்பட்டது.கேரளாவுக்கு என்றே பயிரிட்ட வாழைகள் ஏற்றுமதி செய்யமுடியாமல் தேக்கம் அடைந்தது. சுற்றுப்புற பகுதிகளில் விளையும் வாழைகள் மேட்டுப்பாளையம் வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. கேரளாவுக்கு ஏற்றுமதி செய்ய வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் வாழை விலை மற்றும் விற்பனை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த வருடம் இதே நேரத்தில் ஒரு கிலோ நேந்திரன் விலை ரூ.55 ஆக இருந்தது. தற்போது ரூ.32-க்கு மட்டுமே விற்பனையாகிறது.