ஆளுநர் ரவி ரோசப்பட்டு வெளியேறுவாரா? – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை கவர்னர் மாளிகையில் ஜனவரி 12 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கும், பொங்கல் பெருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழக ஆளுநர் ரவி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆளுநர் ரவி வழங்கிய அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னமும், தமிழ்நாடு என்ற வார்த்தையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது தற்போது பேசு பொருளாகியுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னமும், தமிழ்நாடு என்ற வார்த்தையும் இருந்தது. தற்போதைய அழைப்பிதழில் இந்திய அரசின் சின்னம் மட்டுமே உள்ளது.

இதுக்குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பது: கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னம் இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் சின்னம் மட்டுமே உள்ளது.

நமது லட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதே போல தமிழ்நாட்டு மக்களின் வரி பணத்தில் இருந்தும் வாடகை வீட்டில் இருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? என பதிவிட்டுள்ளார்.