என்.ஜி.பி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பல கண்டுபிடிப்புகளை நம்மால் உருவாக்க முடியும்!

– கீதாலட்சுமி, துணைவேந்தர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை

டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22 வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

நிகழ்வில் இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்பு முடித்த 2341 பட்டதாரிகள் பட்டங்களை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் தவமணிதேவி பழனிசாமி, என்.ஜி.பி கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் அருண் பழனிசாமி, கோவை மருத்துவ மையம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சி.இ.ஓ புவனேஸ்வரன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

எந்த ஒரு தொழிலையும் நேர்த்தியாக செய்யுங்கள்!

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி வாழ்த்துரை வழங்கி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: நீங்கள் படித்த இந்தக் கல்லூரியையும், உங்களது பெற்றோர்களையும் என்றும் மறந்து விடாதீர்கள். கல்வி என்பது உங்களது வாழ்க்கையில் ஒரு படிக்கல்.

நீங்கள் இந்த கல்லூரி படிப்பிற்கு பின் என்ன ஆக நினைக்கிறீர்களோ அதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். அதற்கான முயற்சிகளை இப்போது இருந்தே தொடங்குங்கள்.

ஒழுக்கத்துடன் கூடிய கல்வி இங்கு உங்கள் அனைவருக்கும் கற்று தரப்பட்டுள்ளது. எந்த ஒரு தொழிலையும் நேர்த்தியாகவும், அழகாகவும் செய்யுங்கள்.

அதில் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும். எங்கு சென்றாலும் என்.ஜி.பி கல்லூரி மாணவர்கள் என்ற முத்திரை உங்களுடன் வரும்.

சிறிய யோசனையை கூட, பெரிய தொழிலாக மாற்றலாம்!

சிறப்பு விருந்தினர் கீதாலட்சுமி தன் பட்டமளிப்பு உரையில் கூறியதாவது: என்.ஜி.பி ஒரு சிறந்த கல்வி நிறுவனம். இந்த பட்டமளிப்பு நாள் மாணவர்களாகிய உங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு தினம்.

கல்வி என்பது உங்களது எதிர்காலத்திற்கான ஒரு பாஸ்போர்ட் போன்றது. ஒரு அடிப்படையான கல்வி என்ன என்பதை நீங்கள் கல்லூரியில் கற்றுவிட்டீர்கள். ஆனால் கல்வி என்பது முடிவில்லாத ஒன்று. அது நம் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம்.

கல்லூரிக்கு பின் பல செயல்களின் மூலம் நீங்கள் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அனுபவங்கள் வாழ்க்கைக்கான சில புரிதல்களை உங்களுக்கு கற்றுக்கொடுக்கும்.

குறிப்பிட்ட வயது வரை பெற்றோர்களின் கண்காணிப்பில் இருந்திருப்பீர்கள். இப்போது நீங்கள் வெளி உலகை பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் சிறகுகள் வளர்ந்துவிட்டது. பறப்பதற்கு தயாராக இருங்கள்.

இந்தக் கல்லூரி நீங்கள் கற்றுக்கொள்வதற்கு மிகவும் அற்புதமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆசிரியர்கள் உங்களுக்கான எதிர்காலத்தை கற்றல் மூலம் வடிவமைத்துள்ளனர்.

நம்பிக்கை மிகவும் முக்கியமான ஒன்று. நேர்மறையாக சிந்தியுங்கள். தோல்விகளை கண்டு என்று பயம் கொள்ளவேண்டாம். முன்னேறி செல்லும் அதே நேரத்தில், இப்போதையை நிகழ்காலத்திற்கான மகிழ்ச்சியையும் கொண்டாட மறந்து விடக்கூடாது.

இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட ஒரு நாடு. இங்கிருந்து அதிக கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும்.

சிறிய கண்டுபிடிப்புகளுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வந்தாலும், நாங்கள் அதற்கு உதவுவோம். அவர்களுக்கான ஒரு பிசினஸ் மாடல், மற்றும் அரசு மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கூறுவோம்.

சிறிய யோசனைகளை கூட, பெரிய தொழிலாக மாற்றலாம்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், இயந்திர கற்றல் ஆகியவை முக்கியமான தொழில்நுட்பங்கள். இவை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. நம்மால் நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்.