கருமத்தம்பட்டி பகுதி மக்கள் காலி மது பாட்டில்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

பள்ளிகள், தேவாலயங்கள் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி மது பாட்டில்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி நகராட்சியின் 25வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: சோமனூரை அடுத்த செல்வபுரம் காலனி பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இதனிடையே மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தி அந்த டாஸ்மாக் கடையை அகற்றினோம். இதனிடையே சவுந்திரராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெறுகிறது.

டாஸ்மாக் கடை அமைக்க முற்படும் பகுதியில் பள்ளிகள், தேவாலயம், மசூதி, நியாயவிலைக்கடை மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் அவ்வழியாக செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். இங்கு டாஸ்மாக் கடை அமைத்தால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என கூறினார்.