கோவையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் துவக்கம்

பொங்கல் பண்டிகை வருகிற 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி இன்று பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தது. அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை மக்கள் பெற்றுக்கொண்டனர். பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 88 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1089 பேர் இலங்கை தமிழர்கள். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

முதல் நாளான இன்று ரேஷன் கடைகக்கு வந்த மக்கள், பொங்கல் பரிசு தொகுப்பை ஆர்வத்துடன் பெற்று சென்றனர். சில ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த தகவல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே அவர் பழைய முறையில் குடும்ப அட்டைதாரர்களின் பெயர் மற்றும் கையெழுத்தை பெற்று பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.