உலகத் தமிழ் பண்பாட்டு மையம் ஆண்டு விழா

என்ன படித்தாலும் தமிழை மறக்காதீர்!

நல்ல பழனிசாமி, தலைவர், கே.எம்.சி.ஹெச்  

உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் 9 ஆம் ஆண்டு விழா டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்விற்கு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைகழகத்தின் மேனாள் துணைவேந்தர் மருத்துவர் சுதா சேஷய்யன் கலந்துகொண்டு 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளை வழங்கினார்.

இதில் உ.வே.சா தமிழறிஞர் விருதை பத்ம ஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம் பெற்றார்.

முனைவர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ் தொண்டர் விருதினையும், ஆயிஷா இரா. நடராசன் பெரியசாமித் தூரன் தமிழ்ப் படைப்பாளர் விருதினையும் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து சிறப்பு விருதுகளை பாரதி கிருஷ்ணகுமார், அசோக்குமார், எழுத்தாளர் சு.வேணுகோபால் பெற்றுக்கொண்டனர்.

மேலும் பேராசிரியர் மருதநாயகம் எழுதிய ஒப்பில் கம்பன் என்ற நூலும், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் ராஜேந்திரன் எழுதிய குழந்தைகள் நலம் (விரிவாக்கப் பதிப்பு) என்ற நூலும் விழாவில் வெளியிடப்பட்டது.

மொழி மற்றும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காதீர்!

உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் தலைவர் நல்ல பழனிசாமி பேசியதாவது:

தமிழுக்கும், நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிர எண்ணம் எனக்குள் இருந்தது.

நான் அமெரிக்காவில் இருந்த போது, உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தை தொடங்க வேண்டும் என்று நினைத்தேன்.

தமிழ் மெல்ல சாகும் என்ற வார்த்தை எனக்கு எப்போதும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தும். எந்த இடத்திற்கும் மொழி முக்கியமானது. தற்போது குழந்தைகளுக்கு தமிழ் பெயரை வைப்பது கிடையாது. இந்த நிலை தொடரக்கூடாது.

பிற மொழிகளின் தேவை உள்ளது. தொழில் செய்ய பிறமொழி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் நம் மொழி மற்றும் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க கூடாது.

2013 இல் துவங்கப்பட்ட எங்கள் மையத்தின் மூலம் தமிழர் வளம், தமிழர் நலம் என்பதைக் கருத்தில் கொண்டு, பல நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் வட்டார மொழிகள் பல உள்ளன. அந்தப் பகுதியின் எழுத்தாளர்களையும் ஊக்குவித்து வருகிறோம்.

என்ன படித்தாலும் தமிழையும், தமிழ் நாகரீகத்தையும், தமிழ்நாட்டையும் மறக்காமல் இருங்கள் என எங்கள் கல்லூரியின் மாணவர்களுக்கு நாங்கள் அடிக்கடி கூறுவது உண்டு.

தமிழ் பரந்த மனப்பான்மையை சொல்லி தரும்!

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சுதா சேஷய்யன் கூறுகையில்: மின் நூல்கள் படிக்கும் போது, கிடைக்காத அனுபவம் புத்தகத்தை கையில் வைத்து படிக்கும் போது, அந்த கதையின் சூழலில் வாழ்ந்து ஓர் புதிய அனுபவத்தை பெற வழிவகுக்கும்.

தமிழ் பண்பாடு என்பது ஆழ்ந்து விரிந்து பரந்தது. உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும் இலக்கணம் உண்டு. ஆனால், தமிழுக்கு மட்டுமே எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று இலக்கணம் உள்ளது.

சொல்கின்ற பொருள் பொதிந்து இருக்க வேண்டும், எதை செய்தாலும் நோக்கம் இருக்க வேண்டும் என்பது தான் தமிழ் பண்பாட்டின் ஆழம்.

தமிழ் புலவர்கள், எழுத்தாளர்கள் ஏதோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பவர்கள் அல்ல. தமிழ் இலக்கியம் எதையும் ஆழமாகவும், அகலமாகவும் பார்ப்பதற்கு எனக்கு கற்றுக்கொடுத்தது. பரந்த மனப்பான்மையை சொல்லிக் கொடுத்தது எனக் கூறினார்.

உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் அறங்காவலர்கள் தவமணிதேவி பழனிசாமி, இயகாகோ சுப்பிரமணியம், முனைவர் ஞானசுந்தரம், பேராசிரியர்கள், மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.