பேச்சுப் போட்டியில் கோவை, ஈரோடு மாணவர்கள் சாதனை

ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக திருக்குறள் பேச்சுப் போட்டி நடத்தியது.

இடைநிலைப் பிரிவு, மேல்நிலைப் பிரிவு, கல்லூரிப் பிரிவு என மூன்று பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 1597 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை தெற்கு, சென்னை வடக்கு, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுச்சேரி, மதுரை, நெல்லை, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் ஆகிய 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்றன. இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.

இதில் ஈரோடு வளையபாளையம், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி தமிழ்க்கனி இடைநிலைப் பிரிவில் முதல் பரிசையும், கோவை மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பண்பாட்டுப் பள்ளி மாணவி ஹரிஷினி மேல்நிலைப் பிரிவில் முதல் பரிசையும், கோவை பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கவிநிலவன் கல்லூரிப் பிரிவில் முதல் பரிசையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

முதல் பரிசு ரூ. 10,000 ரொக்கமும், இரண்டாம் பரிசு ரூ. 7,500 ரொக்கமும், மூன்றாம் பரிசு ரூ. 5,000 ரொக்கமும் மற்றும் அனைவருக்கும் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.