கோவை சிறைச்சாலை சார்பில் பெட்ரோல் பங்க்: 3 மாதத்தில் பணிகள் நிறைவடையும்

கோவை மத்திய சிறை சார்பில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை சந்தை நடத்தப்பட்டு வருகிறது.

சிறை சந்தையினை விரிவுபடுத்தும் விதமாக கோவை மத்திய சிறை, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து கோவை நஞ்சப்பா ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்க் வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு பெட்ரோல் பங்க் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவை காந்திபுரம் டவுன் பஸ்நிலையம் அருகே பாரதியார் ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் சிறை சூப்பிரண்டு ஊர்மிளா, கூடுதல் சூப்பிரண்டு சதீஷ் குமார, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை மத்திய சிறை மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 2-வதாக ஒரு பெட்ரோல் பங்க் அமைக்கப்படுகிறது. 3 மாதத்தில் பணிகள் நிறைவடைந்து பெட்ரோல் பங்க் திறக்கப்படும். இதில் நன்னடத்தை அடிப்படையில் 30 கைதிகள் பணியாற்றுவார்கள் என்றனர்.