கோவையில் ‘செட்டிநாடு திருவிழா’ ஜன., 7 துவக்கம்

செட்டிநாடு மக்களின் வாழ்வியல், அவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளும் வகையில், கோவை விழாவின் ஒரு பகுதியாக கொடிசியா வளாகத்தில் வரும் 7, 8-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை செட்டிநாடு திருவிழா நடைபெற உள்ளது.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நகரத்தார் தொழில் முனைவோர் கூட்டமைப்பு (NEU) கன்வீனர் மணிவண்ணன், செட்டிநாடு திருவிழா 2023 தலைவர் ராமு, நகரத்தார் தொழில் முனைவோர் கூட்டமைப்பு உறுப்பினர் மற்றும் லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துராமன் ஆகியோர் பேசியதாவது:

செட்டிநாடு திருவிழா முதன் முறையாக கோவையில் நடைபெறுகிறது. இங்கு செட்டிநாடு பிரபலமான கோவில்கள், கலைப் பொருட்கள், கட்டிட வேலைபாடுகள், செட்டிநாடு சைவ மற்றும் அசைவ சமையல் வகைகள், செட்டிநாடு திருவிழாக்கள், கலாச்சார பழக்கவழக்கங்கள், ஆத்தங்குடி டைல்ஸ், சுண்ணாம்பு பூச்சு, செட்டிநாடு பலகார வகைகள் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள் போன்றவற்றை இந்த காலத்து மக்கள் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்வதற்கான முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இங்கு பொதுமக்கள் இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் செட்டிநாடு மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளலாம். இங்கு பிள்ளையார்பட்டி கோவில் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல் புதிதாக தொழில் தொடங்குவோர் மற்றும் கல்வி உதவி தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் வழிகாட்டுதலும் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இவ்விழாவினை கொடிசியாவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். செட்டிநாடு குழும நிறுவனங்கள் தலைவர் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பேட்டியின் போது நகரத்தார் தொழில் முனைவோர் கூட்டமைப்பு கோ கன்வீனர் விஷ்ணு, உறுப்பினர்கள் சுப்பிரமணியம், அழகப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ராயல்டி பாஸ் பெற 6383911627 , www.neucbe.com என்ற இணைய தளத்தில் தொடர்பு கொள்ளலாம்.