“எப்போ வருவாரோ” மூன்றாம் நாள் நிகழ்ச்சி 

 

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2023 நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு கிக்கானி பள்ளியில் செவ்வாய் கிழமையன்று நடைபெற்றது.

8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் அமர்வில் கிருஷ்ணா, கலந்து கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்து சொற்பொழிவாற்றினார்.

பக்தி ஒன்றே இலக்கு!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் குறித்து எழுத்தாளரும், ஆன்மீக பேச்சாளருமான கிருஷ்ணா பகிர்ந்து கொண்டது: ராமகிருஷ்ண பரமஹம்சர் காளி கோவிலில் அர்ச்சகராக இருந்து, அனுதினமும் காளியை தரிசித்தார். இந்த பாரத தேசத்தில் என்னென்ன அழிவுற்று இருந்ததோ, அதை எழுச்சி பெற வைத்து, பல வித சம்பிரதாயங்களை எழுச்சி பெற வைத்தார். பரமஹம்சரின் குடும்பமே ஒரு திவ்ய குடும்பம்.

கொல்கத்தாவில் இருந்த ராணி ராசாமணி என்ற மகாராணி மிகுந்த தெய்வ பக்தி உடையவர். அவர் மகா காளிக்கு மிகப்பெரிய கோவில் காட்டினார். அந்த காலத்திலேயே காளி கோவில் கும்பாபிஷேகத்துக்கு 9 லட்சம் ரூபாய் செலவளித்துள்ளார். அங்கு அர்ச்சகராக பணிபுரிந்த ராம்குமார், தன் சகோதரர் ராமகிருஷ்ணனுக்கு பூஜை செய்யும் முறைகளை கற்றுக் கொடுத்தார்.

அண்ணன் மறைவிற்கு பின் காளி கோவிலில் பூஜை செய்யும் பொறுப்பு பரமஹம்சருக்கு வழங்கப்பட்டது. அவர் பூஜை செய்யும் முறையை பலர் குறை கூறினர். இருப்பினும், அவர் செய்யும் பூஜைகளில் பக்தி ஒன்றே இலக்காக இருந்தது.

எந்த ஒரு நிமிடத்திலும் மகான்கள், அவர்களின் நிலைகளில் இருந்து மாறுவது கிடையாது. நாமெல்லாம் ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக பூஜைகள் செய்கிறோம். நம் வாழ்க்கையில் பூஜையை எப்படி செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதற்கு அவரது வாழ்க்கை ஒரு உதாரணம்.

உலகில் மிகவும் உன்னதமான விசயம் ஒரு பெண்ணை பூஜிப்பது என்பதை அனைவருக்கும் சொல்லி கொடுத்தார். அந்த வகையில் தன் மனைவி சாரதா தேவியை பராசக்தியின் வடிவமாக வழிபட்டார். மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்பதில் உலகிற்கே வழிகாட்டியாக இருந்துள்ளார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.