
புதுடெல்லியில் வரும் ஜனவரி 26-ம் தேதி நடைபெற உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நடைபெற உள்ள அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பி.எஸ்சி. கணினி அறிவியல் இரண்டாமாண்டு மாணவர் கார்த்திக்ராஜா, பி.எஸ்சி. உயிரி தொழில்நுட்பத்துறை இரண்டாமாண்டு மாணவி அனுசூயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 12 தேசிய மாணவர் படை முகாம்களில் பங்கேற்று அயலக இளைஞர் பரிமாற்றத் திட்டம், கலாச்சார போட்டிகள், பிரதமர் அணிவகுப்பு ஆகிய பிரிவுகளில் தேர்வாகி, இவ்வணிவகுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இக்கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் 6 வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்களுக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி, கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், தேசிய மாணவர் படை அலுவலர் விவேக் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.