18 மாதங்களில் திமுக அரசு கோவைக்கு எதுவும் செய்யவில்லை – எஸ்.பி.வேலுமணி

திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக இபிஎஸ் அணியினர் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் தொண்டாமுத்தூர் பேரூராட்சி சார்பில் தொண்டாமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விலை வாசி உயர்வை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை மாவட்டத்தை, குறிப்பாக தொண்டாமுத்தூர் தொகுதியை புறக்கணிக்கிறார். எடப்பாடியார் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து வருகின்றனர். திமுக ஆட்சி வந்ததும் சொத்து வரி, மின் கட்டணம் பால் விலை என பலவற்றில் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைப்பதாக தெரிவித்தார்.

நேற்றைய தினம் திமுக கூட்டத்தில் பெண் போலீசார் ஒருவருக்கு நடைபெற்ற பாலியல் சீண்டலை சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியில் போலீசாருக்கு கூட உரிய பாதுகாப்பு இல்லை. திமுக நிர்வாகிகளின் பேச்சைக் கேட்டு காவல்துறையினர் செயல்பட வேண்டாம். காவல்துறையை தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என கூறினார்.

ஸ்டாலின் முதல்வரான பிறகு தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகமாகி விட்டது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடியார் தலைமையில் அனைத்து தொகுதிகளையும் வென்று காட்டுவோம். அப்போது கோவையை மேம்படுத்துவோம். திமுக உடனான கட்சிகள் அனைத்தும் அடிமை கட்சிகளாக உள்ளது. திமுக அடுத்த முறை ஆட்சிக்கு வராது என தெரிவித்த அவர், இருக்கின்ற போது மக்களுக்கு நன்மை செய்யுங்கள் என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: விலைவாசி உயர்வை கண்டித்து கோவையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சரி செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு திமுகவால் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை எல்லாம் செயல்படுத்த வேண்டும்.

இந்த 18 மாதங்களில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு எதனையும் செய்யவில்லை. தற்பொழுது மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் திமுகவிற்கு அடிமைகளாக உள்ளது. திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதாக தெரிவித்தார்.