“எப்போ வருவாரோ” இரண்டாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2023 நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் திங்கள்கிழமையன்று நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் அமர்வில் பட்டிமன்ற பேச்சாளர் வாசுகி மனோகரன், கலந்து கொண்டு ‘அருணகிரிநாதர்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

அனுபவ பூர்வமாக உணர்வதே பக்தி!

தனது பாடலில் முருக கடவுள் வரலாற்றைப் பாடி சமய புரட்சி செய்த ‘அருணகிரிநாதர்’ குறித்து,  பட்டிமன்ற பேச்சாளர் வாசுகி மனோகரன் சொற்பொழிவாற்றினார்.

முருகன் அருணகிரிநாதரை மிகவும் விசித்திரமான முறையில் ஆட்கொண்டது பற்றி அவர் கூறுகையில்: சைவ, வைணவத்துக்கு எந்த பேதமும் இல்லாமல், இயலுக்கும் இசைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று எல்லாவற்றையும் ஒன்றாக பார்க்க கூடியவர் அருணகிரிநாதர். பக்தி என்பது சொல்லி தெரிவது அல்ல. அனுபவ பூர்வமாக உணர்வது தான் பக்தி.

மிக சிறுவயதிலேயே ஆற்றல் பெற்றவராக இருந்தும், சிற்றின்பத்தில் அளவு கடந்த ஈடுபாடு அருணகிரி நாதருக்கு இருந்தது. காம வேட்கையில் தன்னை வாழ்நாள் முழுவதும் ஆட்படுத்திக் கொண்டு, அதனால் தோய்ந்து அவருக்கு தொழு நோய் வந்தது. நோய்வாய் பட்டப்பிறகும் கூட தனது சிற்றின்ப வேட்கையில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை.

இதில் இருந்து மீள வேண்டும் என நினைத்து முருகனை நினைத்து தவம் செய்தார். ஆனால் அவருக்கு முருகன் காட்சி அளிக்கவில்லை. எதற்காக வாழ வேண்டும் என எண்ணி, திருவண்ணாமலையில் வல்லாள மகாராஜா கோபுரத்தில் இருந்து கீழே குதிக்க முற்பட்டார். அவர் கீழே விழும் சமயம், முருகன் ஸ்பரிசம் கொண்டு இரு கரங்களினால் அருணகிரியை தாங்கினார். அக கண்களால் முருகனை தரிசனம் செய்தார். முருகன் மீது ‘முத்தைத் தரு பத்தித்திரு நகை’ என்ற பாடலை பாடி, எப்பொழுதும் இறைவன் புகழைப் பாடும் பணியை மேற்கொண்டார்.

அருணகிரிநாதர் முருக பக்தி இலக்கியங்கள் பலவற்றைப் படைத்துள்ளார். அதிலும் இவர் பாடிய திருப்புகழ் என்பது சாதாரணமானது அல்ல. கந்தரந்தாதி, கந்தரனுபூதி, கந்தரலங்காரம், திருவகுப்பு, வேல் விருத்தம், மயில்விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக் கூற்றிருக்கை ஆகியவை இவர் இயற்றிய பாடல்கள்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.