டெக்ஃபெஸ்ட் போட்டியில் கே.பி.ஆர் மாணவர்கள் வடிவமைத்த படகு முதலிடம்

ஐ.ஐ.டி. பாம்பே நடத்திய “டெக்ஃபெஸ்ட்” என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப போட்டியில் ஆர்.சி படகு பிரிவு போட்டியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி அணி முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

இப்போட்டி பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. அதில் ஆர்.சி படகு போட்டியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் இரு அணிகள் பங்கு பெற்றன.

மொத்தம் 150 அணிகள் பங்கு பெற்ற இந்த போட்டியில் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரின் முதலாம் ஆண்டு மாணவர் விஸ்வா தலைமையில் பங்கு பெற்ற குழுவினர் வடிவமைத்த படகு 21 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடத்தையும், தனுஷ் குமார் என்ற முதலாம் ஆண்டு மாணவர் தலைமையில் பங்கு பெற்ற குழு 23 வினாடிகளில் இலக்கை அடைந்து இரண்டாம் இடத்தையும் பெற்றது.

இந்த போட்டியில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பிரச்சனை அறிக்கை அளிக்கப்பட்டு, மாணவர்கள் குழு அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய படைப்பை உருவாக்க வேண்டும்.

இதில் கே.பி.ஆர் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய படகு, குறைந்தபட்ச எதிர்ப்புடன், குறைந்த எடை கொண்டதாகவும், தண்ணீரில் எளிதாக அதிகபட்ச வேகத்தில் தடைகளை கடந்து செல்லும் வகையிலும், குறைவான பொருள் செலவிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கல்லூரியின் பேராசிரியர் அறிவழகன் வழிகாட்டுதலில் மாணவர்கள் இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றனர். அவர்களை கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் துறை தலைவர், பேராசிரியர்கள் பாராட்டினர்.