ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

– கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் பரவசம்

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா, கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. நாள்தோறும் பகல் பத்து உற்சவத்தில் நம்பெருமாள், பல்வேறு சிறப்பு அலங்காரங்களில், மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார்.

மேலும் ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் காலை 200, மாலை 200 விண்ணப்பம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணியளவில் நடைபெற்றது.

இன்று ரத்தினாங்கி சேவையில் வைர முடி, பட்டு வஸ்திரம், தோள்களில் பச்சை கிளிகளுடன் நம்பெருமாள், பரமபத வாசலுக்கு முன்பாக வந்தார். அப்போது ரங்கா, ரங்க ராஜா, ரங்கப்பிரபு, கோவிந்தா என பெருமாளை தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள், பக்தி பரவசத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக 3.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரங்க ராஜன் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல் பத்து உற்சவம் முழுவதும் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள், இன்று முதல் ஆயிரம் கால் மண்டபத்தில் ஆழ்வார்களுடன் எழுந்தருள உள்ளார்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் மாதம்தோறும் எண்ணற்ற திருவிழாக்கள் வைபவங்கள் நடைபெற்று வந்தாலும், மிகமுக்கிய திருவிழாவாக வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சி பக்தர்களால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.