கொசு வலையால் மூடிக்கொண்டு நூதன முறையில் மனு அளித்த சூலூர் மக்கள்

அரசாங்க இடத்தில் சாக்கடை கட்டுவதற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தடையாக இருப்பதாக கூறி பொதுமக்கள் கொசு வலைகளால் தங்களை மூடி கொண்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள அரசாங்க இடத்தை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் அப்பகுதி மக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள காலி இடத்தில் தற்பொழுது கழிவுநீர் சாக்கடை வசதி செய்து தர பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என அங்கிருக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர். ஆனால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அந்த இடம் அரசாங்கத்திற்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தில் சாக்கடை வசதிகள் செய்து தருமாறு கூறி இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவன தலைவர் அப்பகுதி மக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மனு அளிக்க வந்த அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக சாக்கடை வசதி இல்லாமல் கொசு, புழு பூச்சிகள் உள்ளிட்டவற்றால், அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது பணிகள் துவங்கப்பட்டும் அதற்கு இடையூறு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி சாக்கடை வசதி ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தி கொசு வலைகளால் தங்களை மூடி கொண்டு கோரிக்கை பதாகைகளை ஏந்தி நூதன முறையில் மனு அளித்தனர்.