இந்தியாவில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

– ஆய்வில் தகவல்

இந்தியாவில் கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு, டிசம்பரில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வேலைவாய்ப்புகள் இல்லாதவர் குறித்து மாதந்தோறும் புள்ளி விவரங்களை சி.எம்.ஐ.இ அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் 8 % இருந்த வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் விகிதம் தற்போது 0.3 விழுக்காடு உயர்ந்து 8.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

நகர்புறத்தில் வேலையின்மை விகிதம் டிசம்பரில் 8.96 சதவீதத்திலிருந்து 10.09 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று சி.எம்.ஐ.இ தரவு காட்டுகிறது, அதே நேரத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதம் 7.55 சதவீதத்தில் இருந்து 7.44 சதவீதமாக சரிந்துள்ளது.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் வாரியாக பார்த்தால் வடாமநிலங்களில் வேலையின்மை அதிகரித்துள்ளது. அதன்படி டிசம்பரில் அரியானாவில் வேலையின்மை 37.4 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.5 சதவீதமாகவும், டெல்லியில் 20.8 சதவீதமாகவும் இருந்தது.

இதுபற்றி சி.எம்.ஐ.இ.,யின் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறியதாவது: வேலையின்மை கடந்த 2022ம் ஆண்டில் அதிகபட்சமாக டிசம்பரில் பதிவாகி உள்ளது என தெரிவித்த அவர், அதேநேரத்தில் வேலைவாய்ப்பு விகிதம் டிசம்பரில் 37.1 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றார். இது பாசிட்டிவ்வான ஒன்று தான். ஏனென்றால் 2022 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு டிசம்பரில் தான் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது என்கிறார்.