சவுதி அரேபியாவில் தயாராகும் பிரமாண்ட கண்ணாடி நகரம்!

சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் 200 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டு ஒரு நீண்ட கோடு போன்று ஒரு நகரத்தை சவுதி அரேபியாவில் உருவாக்கும் அறிவிப்பை அந்த நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் இந்தாண்டு தொடக்கத்தில் அறிவித்து இருந்தார். அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ட்ரோன் காட்சியில் எடுக்கப்பட்ட இதன் படங்கள் கூட சமீபத்தில் வெளியானது.

சவுதி அரேபியாவின் எதிர்கால பொருளாதாரம் மற்றும் சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டு, கார்பன் இல்லாத நகரமாக உருவாக்கப்படும் இந்நகரத்திற்கு ‘NEOM’ என பெயரிடப்பட்டுள்ளது. 100% புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் வகையில் அமைவதோடு, 95% நிலம் இயற்கைக்காக பாதுகாக்கப்படும். வடமேற்கு சவுதி அரேபியாவில் 500 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் இந்த நகரத்தின் கட்டுமான பணிகள் 2030 க்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நகரங்களைப் போல் இல்லாமல், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பில் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இங்கு 9 மில்லியன் பேர் வசிக்கலாம். மேலும் இவ்விடத்தில் வசிக்கப்போகும் மக்கள் ஐந்து நிமிட நடைப்பயணத்தில் அனைத்து வசதிகளையும் அணுகலாம். கார்பன் இல்லாத நகரமாக உருவாக்கப்படுவதால் இங்கு மாசு ஏற்படுத்தக்கூடிய வாகனங்கள் இருக்காது. 170 கிமீ நீளம் கொண்ட இந்த நகரை ஒரு மூலையில் இருந்து, மற்றொரு மூலைக்கு 20 நிமிடங்களுக்கு அடைந்துவிடும் வகையில் அதிவேக இரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருபுறமும் வெளிப்பக்கத்தில் கண்ணாடியில் மூடப்பட்ட தோற்றத்தை கொண்டிருக்கும் இந்த நகரத்தில், சூரிய ஒளி, நிழல் மற்றும் இயற்கை காற்றோட்டம் ஆகியவற்றின் உகந்த சமநிலையை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்படும். நகரம் முழுவதும் ஏற்படுத்தப்படும் பசுமையான திறந்தவெளிகள் இங்கு வசிப்பவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும், இங்கு வருபவர்களுக்கும் நல்ல ஒரு வசதியையும், சூழலையும் ஏற்படுத்தும்.

செங்குத்தான அடுக்குகளாக கட்டப்படும் இந்நகரத்தில் வேலை, வாழ்க்கை, விவசாயம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளும் இருக்கும்.  மக்கள் நடந்து செல்வதற்கான சாலைகள், பூங்காக்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை மேல் அடுக்கில் இடம்பெற்றிருக்கும்.

கீழ் அடுக்கில் பள்ளிகள், கல்லூரி, அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஐடி போன்ற வணிக வளாகங்கள் இருக்கும். மேலும் இந்த நகரத்திற்கான கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஆர்டிபிசியல் இன்டெலிஜன்சைப் பயன்படுத்தி உருவாக்கப்படவுள்ளது.