புத்தாண்டு கொண்டாட்டம்: கோவையில் 1500 போலீசார் பாதுகாப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கவும், பாதுகாப்பிற்காகவும் 1500 காவல்துறையினர் புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த சில மாதங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புடைய 146 கைபேசிகளை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 621 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போதை எதிர்ப்பு விழிப்புணர்வு மூலம் மாணவர்கள் கொடுத்த தகவல்கள் உள்ளிட்டவற்றில் கஞ்சா குற்றவாளிகள் பிடிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.

2022 இல் மட்டும் 35 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு 51 கொலை வழக்குகள் இருந்தது. மேலும் இந்த ஆண்டு ஆதாய கொலைகள் 5 நடைபெற்று உள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்றார்.

இந்த ஆண்டு 218 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக கூறினார். புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கவும், பாதுகாப்பிற்காகவும் 1500 காவல்துறையினர் புத்தாண்டு பாதுகாப்பில் உள்ளனர் என்றார்.

மேலும் ஈஷா மையம் சென்ற பெண் காணாமல் போனது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையில் உள்ளதால் சில தகவல்களை கூற முடியாது என தெரிவித்தார்.