கேரளாவிற்கு கனிமவளங்கள் கொள்ளை – குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பழனிசாமி பேசியதாவது: கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்குவாரிகள் மூலம் கேரளாவிற்கு ஜல்லி போஸ்டர், கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் போன்றவைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

அரசு அனுமதி வழங்கிய 2 யூனிட்டிற்கு பதிலாக 12 யூனிட் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பொருட்கள் கடத்தி கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அரசுக்கு மாதம் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கனிமவளத்துறை கவனிக்காமல் உள்ளதால் இந்த தவறு நடப்பதாக கருத முடிகிறது. வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் பயன்படாத கல்குவாரிகளில் மழை நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் கனிமவளத்துறை அனுமதி சீட்டு இல்லாமல், அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், காரமடை மேற்கு பகுதிகள் உள்பட பல இடங்களில் கிராவல் மண் இரவு நேரங்களில் கடத்தப்படுகிறது. இதனை உடனடியாக கலெக்டர் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்குவாரிகளுக்காக கனரக வாகனங்கள் கிராமப்புற சாலைகளை பயன்படுத்துவதால் அந்த சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் கிராம விவசாயிகள், வாகனங்களில் சென்றுவர முடியவில்லை என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் பேசும்போது, அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டைக்காக விவசாயிகள் நிலம் எடுக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் இந்த அறிவிப்புக்கு முன்னதாக விவசாயிகள் நிலங்களையும் இணைத்து தொழிற்பேட்டை அமைக்க போடப்பட்ட அரசாணையை தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை. உடனே இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்று பேசினார்.