பிறரின் மத நம்பிக்கையை மதிக்கும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்!

– முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன்

கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் ஒன்று இணைவோம் கோவைக்காக என்ற மத நல்லிணக்க நிகழ்ச்சி கோவை ஐ.எம்.ஏ ஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சிடிசி அப்துல் ஜப்பார் வரவேற்றுப் பேசினார்.

நிகழச்சியில் பேரூர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், சி.எஸ்.ஐ கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர், கோவை மறை மாவட்ட முதன்மை குரு தனசேகர், குருத்வாரா சபை தலைவர் குர்பிரீத் சிங், மாநில ஜமாத் உலமா தலைவர் முகமது அலி, சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், கோவை மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக், மதிமுக செயலாளர் மோகன் குமார், சென்னை மொபைல்ஸ் சம்சுஅலி, வழக்கறிஞர் நந்தகுமார், டாக்டர் பஷீர் அகமது உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் சிறப்புரையாற்றும் போது பேசியதாவது: தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும், யார் செய்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டும். தீவிரவாதிகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் அமைதியாக வாழ முடியும் என்று கூறினார்.

அரசு வேலை கிடைத்து வெளியூர் போவதாக இருந்தாலும் கோவையை விட்டு போக வேண்டுமே என்று வருந்திய காலம் ஒன்று உண்டு. ஆனால், இன்றைக்கு இடையில் நடந்த சில சம்பவங்கள் கோவையில் அமைதியை கடுத்திருக்கிறது. மீண்டும் அந்த அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியாக அப்துல் ஜப்பார் அவர்கள் ஐக்கிய ஜமாத் சார்பில் நடத்தும் இந்த நிகழ்ச்சியை நாம் பாராட்ட வேண்டும்.

இத்தகைய நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்க வேண்டும். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற மதப் பண்டிகைகளையும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நடத்துகிற சமய ஒற்றுமை பெரு விழாக்களாக நாம் கொண்டாட வேண்டும். அப்படி செய்தால் அடுத்த தலைமுறை ஒற்றுமையை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

ஒரு சிலர் செய்த தவறான செயலுக்காக நாம் குற்ற உணர்ச்சியோடு இருக்கிறோம். அசம்பாவிதம் நடந்த பிறகு வருந்துவதற்கு பதிலாக இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்காமல் பார்த்துக் கொள்வது நமது கடமை.
நடந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று பேசுவது தீர்வு தராது. பிரச்சினையை வளர்க்கத் தான் செய்யும். ஆனால், அதை எப்படி தீர்ப்பது என்று நாம் சிந்தித்தால் நல்ல தீர்வும் அமைதியும் கிடைக்கும்.

எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். அன்பையும் சமாதானத்தையும் நாம் விதைத்தால் அன்பும் சமாதானமும் நமக்கு கிடைக்கும். எண்ணத்தை பொறுத்தது தான் வாழ்க்கை என்று பகவத் கீதையும், திருக்குர்ஆனும், பைபிளும் கூறுகிறது. அதையே திருக்குறளும் எண்ணத்தைப் பொறுத்ததுதான் வாழ்க்கை என்று சொல்லுகிறது.

மற்றவர்களின் மத நம்பிக்கையை மதிக்கிற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அவரவர் வழி அவர் அவர்களுக்கு என்று உணர்வோடு நாம் வாழ பழக வேண்டும். பிரிவினைகளை தவிர்த்து அன்பெனும் ஆலயத்தை நாம் எல்லோரும் எழுப்பி, மீண்டும் கோவையில் அமைதியை உருவாக்க வேண்டும் என்று பேசினார்.