சச்சிதானந்த பள்ளி சார்பில் துவக்கப் பள்ளி தத்தெடுப்பு

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, மேட்டுப்பாளையம் ஓடந்துறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள பஞ்சாயத்து துவக்கப்பள்ளியை தத்து எடுத்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தச் சான்றிதழை, மாவட்ட ஆட்சியர் சமீரன் காந்திநகர் பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமையாசிரியையிடம் வழங்கினார். தத்து எடுக்கப்பட்டுள்ள துவக்கப் பள்ளியை ஒரு முன் உதாரணப் பள்ளியாக மேம்படுத்துவதற்கேற்ப அடிப்படை மற்றும் வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்நிகழ்வில், பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் கவிதாசன், பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.