சைக்கிள் போட்டியில் பதக்கம் பெற்ற வீராங்கனைகள்: கோவை கலெக்டர், கமிஷனர் பாராட்டு

தமிழ்நாடு சைக்கிள் போலோ அமைப்பு சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தேசிய அளவிலான தமிழ்நாடு பெண்கள் சைக்கிள் போலோ போட்டி நடைபெற்றது.

கேரளா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிபோட்டியில் 3.0 என்ற புள்ளியில் தமிழ்நாடு அணியின் சார்பில் பங்கேற்ற கோவை வீராங்கனைகள் மூன்றாவது இடத்தை வென்று வெண்கல பதக்கம் மற்றும் கோப்பையை பெற்றனர்.

பயிற்சியாளர்கள் அருண் மற்றும் சேகர், அமைப்பின் தலைவர் சுபிக் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பெண் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் கோவை வீரர்கள் எட்டு பேர் மற்றும் சென்னை, சேலம், செங்கல்பட்டு, நெல்லை வீரர்கள் மொத்தம் 24 பேர் பங்கேற்றனர்.

வெற்றி பெற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கோவை வந்த வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

போட்டியில் பங்கேற்கச் செல்லும் முன் தமிழக வீராங்கனைகள் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று அமைச்சர் உதயநிதி மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்தனர்.