செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துடன் தமிழ்நாடு மத்தியப் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருவாரூர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கான உதவித்தொகைத்திட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் இத்திட்டம் தொடர்வதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிறுவன இயக்குநர் சந்திர சேகரன், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக கழகப் பதிவாளர் சுலோச்சனா சேகர் கையெழுத்திட்டனர். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் இரவி உடனிருந்தார்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 40 முதுகலை மாணவர்கள் பயனடைந்து வந்தார்கள். இதன் நீட்சியாக சில திருத்தங்களின் அடிப்படையில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெப்பமிடப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி 2023 முதல் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20 மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உதவித்தொகையானது வரும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை கூடுதலாக சூழலுக்கேற்ப தேவைப்படின் கூட்டி வழங்கப்படும்.

இவ் ஒப்பந்தம் தரமான முறையில் செவ்வியல் இலக்கியங்களைக் கற்பித்தல் மற்றும் பயிற்சி திட்டங்கள் போன்ற முறைகளில் ஒத்துழைத்து, செவ்வியல் இலக்கியத் தமிழ்க் கல்வியின் பரந்த நோக்கத்தை மேம்படுத்துவதற்காகவும் பன்முகப்பார்வையில் செவ்வியல் இலக்கியங்களை எடுத்துச் செல்வதற்காகவும் போடப்பட்டிருக்கிறது.