2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்கும் சீரம் நிறுவனம்

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், மத்திய அரசுக்கு 2 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை இலவசமாக வழங்க சீரம் நிறுவனம் முன்வந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இந்தியாவில் பெரும்பாலானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு சீரம் நிறுவன இயக்குநா் பிரகாஷ் குமாா் சிங் கடிதம் எழுதியுள்ளதாகவும், அதில் ரூ. 410 கோடி மதிப்பிலான தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனம் இதுவரை 170 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டுகளை தேசிய நோய்த்தடுப்பு திட்டத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் நாடு முழுவதும் மூன்றாம் தவணை தடுப்பூசியை 27 % பெரியவா்கள் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ள சூழலில், தகுதிவாய்ந்தவா்கள் தாங்களாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.