கோவையில் ஆயுதப்படை காவலர்களுக்கான படைதிரட்டு கவாத்து பயிற்சி

கோவையில் ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் படி கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் நேற்று வரை வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நவீன ஆயுதங்களை கையாளுதல், கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலகக் கூட்டத்தை கலைத்தல், அணிவகுப்பு கவாத்து, பாதுகாப்பு பணிகள், மன நலம் மற்றும் உடல் நலத்தை பேணுதல், ஆரோக்கியமான உணவு முறை போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இதில் சுமார் 550 போலீசார் பயிற்சி பெற்றனர். பயிற்சியின் நிறைவு நாளான இன்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற அலங்கார அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அணிவகுப்பு கவாத்தினை பார்வையிட்டார்.

மேலும் இதில் மாநகர காவல் துறையில் பயன்பாட்டில் இருந்து வரும் அனைத்து காவல் வாகனங்களையும் ஆய்வு செய்து ஆயுதப்படை காவலர்களுக்கும், காவல் வாகன ஓட்டுனர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

மேலும் காவலர்களிடம் தேவைகளை கேட்டறிந்தார் அவரிடம் காவலர்கள் பல்வேறு தேவைகளை முன் வைத்தனர். இது குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆயுதப்படை காவல்துறை துணை ஆணையர் முரளிதரன், காவல் உதவி ஆணையர் சேகர், காவல் ஆய்வாளர்கள் கோவிந்தராஜு, பிரதாப் சிங் மற்றும் காவல் ஆளிநர்கள் பலர் கலந்து கொண்டனர்.