பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் டிச.,30 முதல் விநியோகம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் விநியோகிப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக பொங்கல் பரிசில் 21 பொருள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

பொங்கல் ரொக்கப் பணம் தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ரூ.1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2ம் தேதி சென்னையில் முதலமைச்சரும், மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜனவரி 5 ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் டிசம்பர் 30,31 மற்றும் ஜனவரி 2,3,4 ஆகிய தேதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும், குடும்ப அட்டைதாரர்கள் எந்த தேதிகளில், பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரம் டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.